எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் அத்தியாவசியமான கால்சியம் சத்து நிறைந்த இந்த லட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த கருப்பு உளுந்து லட்டு, தினசரி தேவைப்படும் கால்சியம் சத்தை சுவையான முறையில் பெற ஒரு சிறந்த வழியாகும். இதனை எப்படி செய்வது என்று காத்துவாக்குல சமையல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 100 கிராம்
எள் - 50 கிராம்
பச்சை பயறு - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 5
நெய் - 50 மிலி
செய்முறை:
முதலில், கருப்பு உளுந்து, எள், பச்சை பயறு, மற்றும் பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில், பொன்னிறமாக வறுக்கவும். ஆறிய பிறகு, இவற்றை மிக்சியில் தனித்தனியாக பொடித்துக்கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில், பொடித்த மாவு வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு கம்பி பதத்திற்கு வர வேண்டாம், வெல்லம் கரைந்தால் போதும்.
கரைந்த வெல்லப் பாகை, வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இறுதியாக, உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மாவை நன்றாக பிசையவும். மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன், சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து லட்டுகளாக்கவும்.
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. ஆர்த்தரைட்டிஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்க உதவுகிறது.
கருப்பு உளுந்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்க உதவும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது.