இந்தக் கீரையை கடைந்து குருணை சாதத்துடன்... தாய்ப் பாலுக்கு அப்புறம் பெஸ்ட்: மருத்துவர் சிவராமன்
அரைக்கீரையில் இருக்கும் ஏராளமான சத்துகள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், இதனை குழந்தைப் பருவத்தில் இருந்து சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.
குழந்தைப் பருவம் முதலே உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வேண்டுமென்றால் அரைக்கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, தாய்ப்பாலுக்கு பின்னர் குழந்தைகளுக்கு திட உணவு வழங்கக் கூடிய பருவத்தில், முதன்முதலில் அறிமுகப்படுத்த வேண்டியது அரைக்கீரை தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இத்தகைய நன்மைகள் நிறைந்த அரைக்கீரை பார்ப்பதற்கு சாதாரண களைச் செடி போல காட்சியளிக்கலாம். ஆனால், அதில் இருந்து கிடைக்கும் சத்துகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இந்த அரைக்கீரையில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக் கூடிய அளவில் இதில் நார்ச்சத்து இருக்கிறது என சிவராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரியவர்களுக்கு சமைத்து கொடுக்கும் வகையில் பொறியலாகவோ அல்லது கூட்டாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அதன்படி, அரைக்கீரையை குழைவாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கீரை மசியலை குருணை சாதத்துடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு சமைத்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு எளிதாக செரிமானம் ஆகும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள், அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுபவர்கள், சிறுநீரக தொற்று இருப்பவர்கள் ஆகியோரும் அரைக்கீரை மசியலை சாப்பிடலாம். அரைக்கீரை மசியலை புழுங்கல் அரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
மேலும், இளம் பருவத்திலேயே கீரையை சாப்பிட்டு பழக்கப்படுத்துவதன் மூலம் மற்ற காய்கறிகளின் சுவையையும் எளிதாக பழக்கப்படுத்த முடியும். கீரையில் குளிர்ச்சித் தன்மை மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இரவு நேரத்தில் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.