இந்தக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டாக பண்ணுங்க; உடல் சூடு - சிறுநீரக பிரச்சனைக்கு பை சொல்லுங்க: மருத்துவர் சிவராமன்
முளைக்கீரையின் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மிகச் சாதாரணாமக கிடைக்கக் கூடிய முளைக்கீரையில், ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்திருக்கின்றன என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, வெப்ப மண்டலத்தில் அதிகமாக வசிக்கும் மக்களின் உடல் உஷ்ணத்தை குளிர்விக்கும் தன்மை முளைக்கீரையில் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் தேவைப்படும் சத்துகள் முளைக்கீரையில் இருக்கிறது. காய்ச்சல் நேரத்தில் பெரும்பாலும் கீரை வகை உணவுகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்துவார்கள். செரிமானத்திற்கு சிரமமாக இருக்கும் காரணத்தினால், காய்ச்சலின் போது உணவாக கீரையை கொடுக்க மாட்டார்கள்.
ஆனால், சளி, இருமல் போன்ற எந்தப் பிரச்சனை இருந்தாலும் முளைக்கீரையை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீரக கோளாறுகள் சிலருக்கு ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் அவசியம் முளைக்கீரையை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, முளைக்கீரையை கூட்டாக செய்து சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு முளைக்கீரையை சமைக்கும் போது, அவற்றுடன் பாசிப் பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் உடலுக்கு தேவையான குளிர்ச்சி மற்றும் புரதச் சத்துகள் ஆகியவை ஒன்றாக கிடைத்து விடும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு இருக்கும் வெள்ளைப் படுதல் நோயின் காரணமாக, அவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள்.
Advertisment
Advertisements
இந்தப் பிரச்சனையை குணப்படுத்தும் தன்மை முளைக்கீரைக்கு இருக்கிறது. எனவே, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முளைக்கீரையை உட்கொள்ளலாம். இது தவிர வாய்ப்புண், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் முளைக்கீரை கட்டுப்படுத்துகிறது. முளைக்கீரையில் இருக்கும் பயன்கள் அனைத்தும் தண்டுக் கீரையிலும் இருக்கிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
எனினும், நெஞ்சு சளி தொல்லை இருப்பவர்கள் குளிர்ச்சியான நேரத்தில் முளைக்கீரை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம். இதேபோல், இரவு நேரத்திலும், தயிர் சாதத்துடனும் சேர்த்து கீரையை சாப்பிடக் கூடாது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Trend Care Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.