/indian-express-tamil/media/media_files/2025/04/23/BygYS0Vjh0jp0LkAKsac.jpg)
கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும், விலையில்லா பொக்கிஷமாக முருங்கைக்கீரை திகழ்கிறது. ஆனால், அது வழங்கும் பயன்கள் மிகவும் விலைமதிப்பற்றவை. முருங்கைக்கீரையில் அத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றின் சத்துக்கள் குறித்து டாக்டர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
சின்ன வயதிலிருந்து நாம் "சி பார் கேரட்" என்று படித்திருப்போம். இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்காலே பிரபு, கேரட் கண்களுக்கு நல்லது என்பதால் அதை எளிதாகக் கூறிச் சென்றுவிட்டார். ஆனால், நம் நாட்டில் விளையும் முருங்கைக்கீரை, கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு கண்களுக்கு நல்லது செய்யும் சத்துக்களைக் கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஒருவேளை "எம் பார் முருங்கைக்கீரை" என்று சொல்லி இருந்திருந்தால், இது நமக்குத் தெரிந்திருக்கலாம். அந்த அளவுக்கு முருங்கைக்கீரை கண்ணுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது.
கண்களுக்குத் தேவையான முக்கிய சத்தான பீட்டா கரோட்டின்ஸ் மற்றும் அதன் முன்னோடி சத்துக்களான கரோட்டினாய்டுகள் முருங்கைக்கீரையில் மிக அதிக அளவில், கிட்டத்தட்ட 80,000 முதல் 90,000 அளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. முருங்கைக்கீரை விரைவில் பழுத்து மஞ்சள் நிறமாக மாறுவதற்கு இந்த கரோட்டினாய்டு சத்துக்களின் அதிக அளவுதான் காரணம் என்று தாவரவியலாளர்கள் கூறுகிறார்கள்.
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. மற்ற எல்லா கீரைகளை விடவும் முருங்கைக்கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முருங்கைக்கீரை தனித்துவம் வாய்ந்தது. இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு அதைச் சீராக வைத்திருக்கவும், அதிகமாக இருப்பவர்களுக்கு அதைக் குறைக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது. குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், தங்கள் உணவில் முருங்கைக்கீரையை அதி முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முருங்கைக்கீரையை சூப் போலத் தயாரித்து, அதில் சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு சேர்த்து, தண்ணீரை வெளியேற்றாமல் காலை உணவோடு எடுத்துக்கொண்டால், பலருக்கும் இரத்த கொதிப்பு குறைவதை அறிவியல் பூர்வமாகப் பார்த்துள்ளனர். இரத்த கொதிப்பு 150/100 போன்ற அளவில் உள்ளவர்கள் தொடர்ந்து இதை எடுத்துக்கொண்டால், காலை நேரத்தில் இரத்த கொதிப்பு அதிகரிக்கும் தன்மை குறைவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இரத்த கொதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு பொருள் இதயத்திற்கும் நல்லது.
முருங்கைக்கீரை நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள கீரைகளில் ஒன்றாகும். நடுத்தர வயதுடையவர்கள் அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம். சைவ உணவு உண்பவர்களுக்கு இயல்பாகவே நார்ச்சத்து குறைவாக இருக்கும். அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து குறைவாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்படலாம் மற்றும் இரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரையும் நார்கள் மற்றும் கரையாத நார்கள் என இரண்டு வகையான நார்ச்சத்தும் முருங்கைக்கீரையில் நிறைந்துள்ளது.
உருளைக்கிழங்கில் குளுக்கோஸ் மட்டுமே கிடைக்கும், கேரட்டில் பீட்டா கரோட்டீன் மட்டுமே கிடைக்கும், அவரைக்காயில் ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி மட்டுமே கிடைக்கும். ஆனால் முருங்கைக்கீரை, பல பலன்களைத் தன்னுள்ளே பொதிந்துள்ள ஒரு சிறப்புமிக்க கீரை. இதற்குப் பெரிய விலையில்லை என்றாலும், இது அத்தனை நல்ல விஷயங்களைச் செய்கிறது.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அடையுடன் கடலைப்பருப்பு சேர்த்து அடை செய்யும்போது முருங்கைக்கீரையை சேர்க்கலாம். கூட்டாஞ்சோறு, கூட்டுக்கறி போன்றவற்றை சமைக்கும்போதும் முருங்கைக்கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம் என டாக்டர் சிவராமன் கூறுகிறார்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.