முருங்கைக்கீரை, ஒரு ஊட்டச்சத்து powerhouse, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் A, C, E, மற்றும் B வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களால் நிரம்பியுள்ளது. இது நினைவாற்றலை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் ஒரு சிறந்த மூலிகையாகச் செயல்படுகிறது. இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், எலும்புகளை வலுப்படுத்துவதிலும் இதன் பங்கு மகத்தானது. இந்த அதிசயக் கீரையை உங்கள் தினசரி உணவில் பல வடிவங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
முருங்கை கீரை பொறியல் - தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 2 கப் (ஆய்ந்து, நன்கு சுத்தம் செய்தது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1 (கிள்ளியது)
சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, மற்றும் கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து, கடுகு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
சுத்தம் செய்த முருங்கைக்கீரையைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் (சேர்ப்பதாக இருந்தால்) சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, கீரை மென்மையாகும் வரை சுமார் ஐந்து நிமிடங்கள் சமைக்கவும்.
முருங்கைக்கீரை பொரியல் தயார். விருப்பப்பட்டால், சமைக்கும் போது சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
முருங்கைக்கீரை துவையல் - தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 2 கப்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிய நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில், சுத்தம் செய்த முருங்கைக்கீரையை சிறிது தண்ணீர் தெளித்து, மென்மையாகும் வரை வதக்கவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வதக்கிய முருங்கைக்கீரை, புளி, தேங்காய்த் துருவல் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான துவையலாக அரைக்கவும். சுவையான முருங்கைக்கீரை துவையல் தயார். இதனை சூடான சாதத்துடன் பிசைந்தோ அல்லது தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.