வெறும் முருங்கைகீரை பொறியல் கூட வதக்கு வதக்கு என்று இருக்கும். பிள்ளைகளுக்கு சாப்பிடவே பிடிக்காது. அப்படி இருப்பவர்களுக்கு அந்த பொறியலில் வறுத்த அரிசி கொஞ்சம் சேர்த்து இந்த மாதிரி சுவையாக செய்து கொடுங்கள் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று செஃப் தினு இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை
சின்ன வெங்காயம்
பூண்டு
காய்ந்த மிளகாய்
கடலைப்பருப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
சமையல் எண்ணெய்
உப்பு
பச்சரிசி
செய்முறை:
ஒரு சிறிய வாணலியில், 1 டீஸ்பூன் பச்சரிசியை எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து தனியே வைக்கவும். முருங்கைக் கீரையை ஆய்ந்து, நன்றாக அலசி தண்ணீரை வடித்து வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறியவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இப்போது ஆய்ந்து வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கீரை சுருளும் வரை நன்றாக வதக்கவும். கீரை நன்றாக வெந்ததும், நீங்கள் வறுத்து பொடித்து வைத்துள்ள அரிசிப் பொடியை சேர்த்து நன்கு கிளறி, ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கீரையை கழுவும்போது, தண்ணீர் வடிந்து போகும்படி வடிகட்டவும். அதிக தண்ணீர் இருந்தால் பொரியல் குழைய வாய்ப்புள்ளது. அரிசியை வறுக்கும்போது கருகாமல் பார்த்துக் கொள்ளவும். கருகினால் கசப்புத்தன்மை வரும். இந்த பொரியல் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம், அல்லது சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.
முருங்கைக்கீரையில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. எனவே இதை பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸிற்கும் கட்டிக்கொடுக்கலாம். இதில் கொஞ்சம் சாதத்தை கொட்டி கிளறி கொடுக்கலாம்.