Soft idli recipe in tamil: இந்திய உணவுகளில் மிகவும் புகழ் பெற்ற உணவாக இட்லி உள்ளது. அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இவை உள்ளன. சூடாக தயார் செய்யப்பட்ட இட்லிகளை சில வகை சட்னிகளுடனும், வீட்டில் வைக்கும் குழம்புகளுடனும் சேர்த்து சுவைத்தால் திருப்தியான உணவு உண்பதற்கு ஈடாக இருக்கும்.
அப்படிப்பட்ட இட்லிகளை சில சமயங்களில் மிருதுவானதாக சமைக்க முடியவில்லை. மிருதுவானதாக சமைக்க மேஜிக் ஒன்றும் தேவையில்லை. இங்கே வழங்கப்பட்டுள்ள சில ஈஸியான டிப்ஸ்களை முயற்சித்தாலே போதும். அந்த வகையில், ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைத்தால் இட்லி பஞ்சு போன்று நன்றாக புசுபுசு என்று இருக்கும்.
2 உளக்கு ரேஷன் அரிசிக்கு, 2 உளக்கு இட்லி அரிசி சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு போல் வரும். புழுங்கல் அரிசி என்றால், 2 உளக்கு பச்சரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதில் முழுமையாக ரேஷன் அரிசி பயன்படுத்தினாலும், இட்லி அரிசியுடன் பாதிக்கு பாதி ரேஷன் அரிசியை சேர்த்து அரைத்தாலும் இட்லி அற்புதமாக வரும்.
ரேஷன் அரிசியில் இட்லி மாவு:

ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 உளக்கு இட்லி அரிசி, 2 உளக்கு ரேஷன் அரிசி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு இவற்றை நன்றாக தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
தொடர்ந்து சுத்தமான தண்ணீர் ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர் முழு வெள்ளை உளுந்தை அரிசி அளந்த அதே உளக்கில் ஒரு உளக்கு எடுத்துக்கொள்ளவும்.
இவற்றுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி அலசி, பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
இவை இரண்டையும் தனித்தனியாக 5 மணி நேரம் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும்.
5 மணி நேரம் நன்கு ஊறுவதற்குள் கடைசி அரை மணி நேரத்தில் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு வெள்ளை அவல் எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும். அவல் பிடிக்காதவர்கள் சேர்க்க வேண்டாம்.
இப்போது 5 மணி நேரம் நன்கு ஊறிய உளுந்தை கிரைண்டரில் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு வெள்ளை சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்.
இதேபோல் அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஊற வைத்த அவலையும் சேர்த்து அரைக்கவும்.
30 நிமிடம் தண்ணீரை தெளித்து தெளித்து பொங்க பொங்க மாவை அரைக்கவும். அவை நன்கு அரைபட்டதும் அவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு கிரைண்டரில் அரிசியை சேர்த்து 10 நிமிடங்களுக்கு அரைத்துக்கொள்ளவும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
தொடர்ந்து நன்கு அரைப்பட்ட இந்த மாவுகள் இரண்டையும் சேர்த்து தேவையான அளவிற்கு கல் உப்பு சேர்த்து நன்கு கைகளால் 10 நிமிடத்திற்கு குறையாமல் கலந்து விடவும்.
இவற்றை இரவு முழுவதும் ஊற வைக்கவும். 8 மணி நேரத்திற்கு பிறகு காலையில் திறந்து பார்த்தால் மாவு தயாராக இருக்கும். அவற்றில் சூடான இட்லிகளை தயார் செய்யலாம். அவையனைத்தும் புசுபுசுவென சூப்பராக வரும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil