மருத்துவ குணம் நிறைந்த மரங்ககளில் முருங்கையும் ஒன்று. இதன் காய்களை உணவுகளில் அன்றாட பயன்டுத்தலாம். இதன் இலைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். ஏனெனில், இவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளன. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், சாதாரண தலைவலி, இருமல் ஏற்படும் போது முருங்கைக்கீரையில் செய்த சூப் சாப்பிட்டால் அவை பறந்து போகும்.
முருங்கைக் கீரை இரும்புச் சத்து, வைட்டமின், மினரல்களை உள்ளடக்கியது. முற்றாத முருங்கை இலை சிறிதளவு எடுத்து, அதோடு சிறிதளவு நெய் ஊற்றி தாளித்து சமைத்து, சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதில் நாம் சேர்க்கும் நெய் முருங்கை இலையோடு சேர்ந்து உடலுக்கு நல்ல வலு தரும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை முயற்சி செய்யலாம்.
இப்படி ஏராளமான அற்புத பயன்களை கொண்டுள்ள முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா, கவலையை விடுங்கள் இதோ உங்களுக்கான எளிய செய்முறையை தருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். விஜய் டி.வி-யின் பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்றதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமான செஃப் வெங்கடேஷ் பட், தற்போது டாப் குக்கு டூப் குக்கு டி.வி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
இந்நிலையில், செஃப் வெங்கடேஷ் பட் கைவண்ணத்தில் டேஸ்டியான முருங்கைக்கீரை சூப் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைசூர் பருப்பு - 100 கிராம் ( குழைய வேகவைத்தது)
முருங்கை இலை - ஒரு கப்
முருங்கைக்காய் - 1 (2 இன்ச் அளவு நறுக்கியது)
கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
பட்டை - 3 துண்டு
இலவங்கம் - 6
ஏலக்காய் - 8
சோம்பு - 1 1/2 டீ ஸ்பூன்
மிளகு - 1 1/2 டீ ஸ்பூன்
ஸ்டார் அன்னாசி பூ - 4
பூண்டு - சிறிதளவு (இடித்தது)
பச்சை மிளகாய் - 5 (இடித்தது)
கல் பாசி - 10 கிராம்
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - ஒரு கொத்து
தண்ணீர் - 2 லிட்டர்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
குக்கிங் சோடா - சிறிதளவு
சிம்பிள் செய்முறை
100 முதல் 150 கிராம் மைசூர் பருப்பை எடுத்து மிக்சியில் 6 விசில் வர விட்டு நன்கு குழைய வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இதனிடையே, முருங்கை இலையை உருவி நன்கு கழுவி தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு முருங்கைக்காய் எடுத்து அதனை 2 இன்ச் அளவு நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு கடாய் எடுத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை சேர்க்கவும். அதனுடன் பட்டை, இலவங்கம், ஏலக்காய், சோம்பு, மிளகு, ஸ்டார் அன்னாசி பூ, இடித்த பூண்டு, இடித்த பச்சை மிளகாய், கல் பாசி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இதன்பின்னர், நறுக்கிய முருங்கைக்காய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து, ஏற்கனவே வேக வைத்துள்ள மைசூர் பருப்பை சேர்க்கவும். அத்துடன் 2 லிட்டர் தண்ணீர் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இவற்றை சுமார் 15 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.
இதனிடையே, ஒரு கடாய் எடுத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அவற்றுடன் குக்கிங் சோடா சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரில் முருங்கை இலை சேர்த்து 10 வினாடிகள் வேக வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு முருங்கை இலையை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். முருங்கை இலையின் சூடு குறைய வெறும் தண்ணீரை விட்டு கழுவிக் கொள்ளவும். பிறகு அவற்றை மிக்சியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் சூப் கலவையை சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். அவற்றுடன், அரைத்த முருங்கை இலை பேஸ்ட் சேர்க்கவும். பிறகு சூப்-புக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொதித்து வந்துள்ள சூப்பில் இருக்கும் முருங்கைக்காயை தனியாக எடுத்து விட்டு, ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டிக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள வேக வைத்த முருங்கைக்காயில் இருக்கும் சதை பகுதியை சூப்புடன் சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த முருங்கைக்கீரை சூப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.