பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி, நேற்று மரணமடைந்தார்.
ஆன்மிக சேவைகளை செய்து வரும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைமையகம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபுவில் இயங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாகி தாதி ஜானகிக்கு வயது 104. வயது மூப்பு காரணமாக சுவாசம் மற்றும் செரிமானக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். ஆகையால், மவுண்ட் அபுவில் உள்ள ஒரு மருத்துவனையில் கடந்த இரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. தாதி ஜானகி உலகளவில் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் குணமான 2-வது நபர்: 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை
தற்போது பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கடந்த 1916-ஆம் ஆண்டு பிறந்த தாதி ஜானகி தனது 21-ஆம் வயதில் ஆன்மிகப் பாதையைத் தோ்ந்தெடுத்தாா். 1970-ஆம் ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் செய்து இந்திய தத்துவம், ராஜ யோகம் ஆகியவற்றை பரப்பினாா். 140 நாடுகளில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சேவை மையங்களை நிறுவியுள்ளாா். தூய்மை மற்றும் பொது சுகாதாரத்தில் சிறப்பாக பங்காற்றியதற்காக, தூய்மை இந்தியா இயக்கத்தின் தூதுவராக இவரை மத்திய அரசு நியமித்தது.
தாதி ஜானகிக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைவரான ராஜயோகினி தாதி ஜானகி, சமூக நலனுக்காக விடா முயற்சியுடன் சேவையாற்றியவா். பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக, அவா் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை. இந்த துயரமான நேரத்தில், தாதி ஜானகியை பின்பற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’ என்று தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, ஜாதி சமய இன வேறுபாடின்றி தியானத்தின் மூலம் அமைதி மற்றும் நற்பண்புகளுடன் வாழும் ஆன்மிக வழியைப் புகட்டியவா் ஜானகி. மக்களிடையே ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டு வர உழைத்தவா். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற ஆண்டவனை வேண்டுகிறேன்' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதும் சுமார் 147க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆன்மீகம், கல்வி மற்றும் சமூகப் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனமான "பிரம்ம குமாரிகள் இயக்கத்தின்" தலைமை நிர்வாகி இராஜயோகினி தாதி ஜானகி அவர்கள் இன்று இறைவனடியில் புனித நிலை அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. மக்களிடம் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை கொண்டு வர கடுமையாக உழைத்த, இராஜயோகினி தாதி ஜானகி அவர்களது இந்த பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்! ஓம் சாந்தி!!' என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தாதி ஜானகியின் மறைவுக்கு பல மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்க்-களுக்கு கட்டுப்பாடு: பிற்பகல் 2.30 வரை மட்டுமே அனுமதி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"