Advertisment

லடாக் எல்லையில் பதற்றம்: ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே நேரில் ஆய்வு

அவசரகால தயார் நிலை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கூடுதல் துருப்புக்களை நகர்த்தும் முயற்சிகளை இராணுவம் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
லடாக் எல்லையில் பதற்றம்: ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே நேரில் ஆய்வு

India- China Border Tension: பாங்காங் த்சோ மோதல் மற்றும் கால்வான் நதி பகுதியில் மூன்று இடங்களில் சீன ஊடுருவல்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து எல்லைக் கோடு கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே லே பகுதியில் அமைந்துள்ள 14-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கு பயணம் செய்தார்.

Advertisment

இந்திய- சீனா எல்லைக் கோடு பகுதியில்," சீனா ராணுவத்தின் சமீபத்திய செயலாடுகள், இந்திய ராணுவத்தின் சாதாரண ரோந்து பணிகளை தடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இந்தியாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளதாக" இந்திய வெளிவிவகார அமைச்சகம் கருத்து தெரிவித்த அடுத்த நாள் ராணுவ தலைமை ஜெனரலின் பயணம் அமைந்துள்ளது.

கடந்த மே 5-6ம் தேதி இரவு நேரங்களில்,  இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பாங்கோங் சோ ஏரியின் இந்திய - சீன துருப்புகள் மோதலை சந்தித்து. அதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அமைந்திருக்கும் கால்வான் நதி பகுதியில் மூன்று இடங்களில் சீனா துருப்புகளின் ஊடுருவல்கள் கண்டறியப்பட்டது. இரு தரப்புகளை சேர்ந்த, உள்ளூர் மட்ட இராணுவத் தளபதிகளிடையே இதுவரை ஐந்து சந்திப்புகள் நடைபெற்றாலும், சர்ச்சைக்குரிய 80 கி.மீ பகுதிகள் குறித்து இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

எல்லைக் கோடு பகுதிகளில் அமைந்துள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், ரோந்து புள்ளி 14 (பிபி -14) பிபி -15 ஆகிய மூன்று இடங்களில் சீன துருப்புகள் அத்துமீறி நுழைந்தததாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மேற்கூறிய, ஒவ்வொரு இடத்திலும், சுமார் 800-1000 சீன துருப்புகள் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.கனரக வாகனங்கள் உட்பட கண்காணிப்பு உபகரணங்களுடன் சீனப் படையினர் கூடாரங்கள் அமைத்துள்ளன. எல்லைக் கோடு பகுதியில் சீன ஹெலிகாப்டர் இயக்கத்தையும்  இந்திய தரப்பு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

300-500 மீட்டர் இடைவெளியில், சம எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சரியாக கூறவேண்டுமெனில், இரு தரப்பினரும் நேருக்கு- நேர் களத்தில் நிற்கின்றனர் என்று இதனை எடுத்துக்கொள்ள முடியாது. அவசரகால தயார் நிலை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கூடுதல் துருப்புக்களை நகர்த்தும் முயற்சிகளை இராணுவம் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிகிறது.

மே 5-6 இரவு பாங்காங் த்சோ ஏரியில் நடந்ததைப் போன்ற கைகலப்பைத்  தவிர்ப்பதற்காக, தற்போது இரு தரப்புகளுக்கு இடையிலான தூரம் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவலுக்கான நோக்கங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை . எனினும், எல்லைக் கோடு பகுதிகளில் இந்தியா தனது  உள்கட்டமைப்பை அதிகரிப்பது போன்ற காரணங்கள் சீனாவைத் தூண்டியிருக்கலாம் என்று  உத்தியோகபூர்வ வட்டரங்களிடையே கருத்து நிலவுகிறது. இருப்பினும், சர்ச்சையில்லாத ஹாட் ஸ்பிரிங் போன்ற பகுதியில் சீன துருப்புகள் அத்துமீறும் செயல், சீனாவின் மோதல் போக்கை பிரதிபலிப்பதாக மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்திய- சீன எல்லைக் கோடு பகுதியில் சீனாவின் சமீபத்திய செயல்பாடுகள்  முன்னோடியில்லாதவை எனப் பெரும்பாலான அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். சீனர்கள் ஒருதலை பட்சமாக நிலைமையை மாற்றுவது  ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நெருக்கடிக்கு ஒரு  விரைவான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேற்கு எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டுப்பாட்டு பகுதியில், சீன துருப்புகளின் விதி மீறல்கள்  குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 170 முறை (லடாக்கில் மட்டும் 130) சீன துருப்புகள் ஊடுருவியுள்ளன. 2019 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 110 ஊடுருவல்கள் கண்டறியப்பட்டது.

இருப்பினும் 2019 ஆம் ஆண்டில் (பிரதமர் நரேந்திர மோடியும்,சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிஷ்கெக்/ மகாபலிபுரத்தில் சந்தித்த ஆண்டு)  663 முறை சீன துருப்புகள் ஊடுருவியுள்ளது.  2018-ல் மொத்த ஊடுருவல்களின் எண்ணிக்கை 404 மட்டுமே இருந்தது. 2019-ல் மேற்கு எல்லையில் 75 சதவீதம், கிழக்கு எல்லையில் 55 சதவீதமாக சீன துருப்புகளின் ஊடுருவல்கள் அதிகரித்தன.

2015 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட முக்கால்வாசி விதிமீறல்கள் மேற்கு எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறுவதாக தரவுகள் கூறுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India Indian Army China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment