375 பேர் பலி, ரூ 19,500 கோடி இழப்பு, மத்திய அரசு ரூ 600 கோடி உதவி: கேரளா சோகம்

Kerala floods: கேரளாவில் வெள்ளம் தாக்கிய முதல் நாளில் 33 பேர் இறந்ததாக புள்ளிவிவரம் சொன்னது. ஆகஸ்ட் 8 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 166 ஆனது.

By: Updated: August 19, 2018, 12:39:12 PM

ஷாஜூ பிலிப், திருவனந்தபுரம்

Kerala floods: கேரளா வெள்ளம் இதுவரை 375 பேர் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. 19,500 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு முதலில் அறிவித்த ரூ 100 கோடி, பிரதமர் சுற்றுப்பயணத்தில் அறிவித்த ரூ 500 கோடி என மொத்தம் ரூ 600 கோடி உதவி அறிவித்திருக்கிறது.

கேரளா வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்டிருக்கும் சோகம் மொத்த இந்தியாவையும் உலுக்கியிருக்கிறது. மாநிலத்தில் சேதமாகியிருக்கும் 83,000 கி.மீ சாலைகளை சீரமைக்க மட்டுமே 13,000 கோடி ரூபாய் தேவை என மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். நிவாரண முகாம்களை இரு மடங்காக அதிகரித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கேரளா வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்: ‘கிடுகிடுவென வீடு மூழ்கியது’ To Read, Click Here

கேரளா வெள்ளம் : நிவாரண பொருட்களை அனுப்புவது எப்படி? தகவல்கள் இங்கே To Read, Click Here

கேரளாவின் துக்கத்தில் பங்கெடுக்கும் அண்டை மாநிலத்தார்கள் – குவியும் வெள்ள நிவாரண நிதி To Read, Click Here

கேரளாவில் வெள்ளம் தாக்கிய முதல் நாளில் 33 பேர் இறந்ததாக புள்ளிவிவரம் சொன்னது. ஆகஸ்ட் 8 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 166 ஆனது. பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் விசிட் செய்த ஆகஸ்ட் 18 நிலவரப்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 375! அரசு தெரிவிக்கும் எண்ணிக்கை இது! அரசாங்க பதிவேடுகளுக்கு வந்து சேராத எண்ணிக்கை இன்னும் எவ்வளவோ?

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெள்ளசேதத்தை பார்வையிட வந்தபோது மத்திய அரசு உதவியாக ரூ 100 கோடி அறிவித்தார். பிரதமர் மோடி நேற்று கூடுதலாக ரூ 500 கோடி அறிவித்திருக்கிறார். மொத்தம் இந்த 600 கோடி ரூபாய் எந்த மூலைக்கு?

கேரளாவில் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களுக்கு வர முடியாமல் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிக் கிடக்கிறார்கள். ஆகஸ்ட் 18-ம் தேதி மட்டுமே வெள்ளத்தால் அதிக சேதத்திற்கு உள்ளான பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் இருந்து 58,506 பேர் நிவாரண முகாம்களுக்கு வந்திருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி வானில் பறந்து வெள்ளச் சேதங்களை பார்வையிட்டபோது ஆளுனர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் ஆகியோரும் உடன் சென்றனர். பலியான ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ 2லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 உதவியையும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சிறப்பு முகாம்களை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி இழப்பீடுகளை வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேதமான சாலைகளை துரிதமாக சீரமைக்கவும் மோடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். தேசிய அனல் மின் கழகம், மின் உற்பத்திக் கழகம் ஆகியவை மின் சீரமைப்புப் பணிகளில் வேகம் காட்டவும் பிரதமர் உத்தரவிட்டார். வெள்ளத்தில் குடிசைகளை இழந்தவர்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ‘கேரளாவில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியை தவிர மற்ற இடங்களில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கின்றன’ என்றார்.

மீட்புப் பணிகளை மத்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியிருப்பது குறித்து பினராயி விஜயனிடம் கேட்டபோது, ‘மாநிலத்தை முழுமையாக அறிந்தவர்களால்தான் மீட்புப் பணிகளை சுலபமாக செய்ய முடியும்’ என்றார்.

மே 19-ம் தேதி முதலான பருவ மழைக்கு 375 பேர் பலியானதாகவும், 19,512 கோடி ரூபாய் மொத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார். 40,000 ஹெக்டேரில் விவசாயப் பயிர்கள் சேதமாகியிருப்பதாகவும், 20,000 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை மட்டும் கேரளாவில் 22 பேர் பலியானார்கள். அவர்களில் 6 பேர் எர்ணாகுளம், பரவூரில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் காங்க்ரீட் கட்டடம் இடிந்து பலியானவர்கள்! ஆலப்புழா மாவட்டம் பந்தநாடு பகுதியில் ஒரு வீட்டுக்குள் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டது. ஆகஸ்ட் 18-ம் தேதிதான் மீட்புப் படையினர் இந்தப் பகுதிக்கு செல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கனூரில் வெள்ளிக்கிழமை இரவு உணவு கிடைக்காமல் முதியவர் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். சாலக்குடியில் மனநோயாளிகள் சிகிச்சை மையம் ஒன்றுக்கு மீட்புப் படையினர் போய்ச் சேர்ந்தபோது அங்கு 3 மனநோயாளிகள் பலியாகியிருந்தனர்.

மத்திய கடற்படையின் 72 குழுக்கள் சுமார் 3,375 பேரை மீட்டிருக்கிறது. கடலோர காவல் படையின் 31 குழுக்கள் 2507 பேரை மீட்டிருக்கின்றன. இவற்றுடன் மாநில அரசின் பல்வேறு துறைகள், மீனவர்கள் இணைந்து மீட்புப் பணிகளை செய்கிறார்கள்.

கேரளா முழுவதும் சனிக்கிழமை நிலவரப்படி, 3471 நிவாரண முகாம்கள் செயல்பாட்டுக்கு வந்தனர். முன் தினம் வரை நிவாரண முகாம்களில் 3.14 லட்சம் பேராக இருந்த எண்ணிக்கை ஒரே நாளில் 6.80 லட்சமாக உயர்ந்தது. பல முகாம்களில் உணவுக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வந்தன.

மோசமான பாதிப்புக்கு உள்ளான எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான வி.டி.சதீசன் கூறுகையில், தனது பகுதி நிவாரண முகாம்களுக்கு அரசின் எந்த உதவியும் வந்து சேரவில்லை என குற்றம் சாட்டினார். ’இந்தப் பகுதியில் மட்டும் 7000 பேர் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள். ஒரு பை அரிசியோ, மருத்துவ உதவியோ இங்கு வரவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யக்கூட இங்கு சுகாதாரப் பணியாளர்கள் இல்லை’ என்றார் வேதனையுடன்!

ஆகஸ்ட் 9-க்கு பிறகு முதல் முறையாக கேரளாவில் எந்த மாவட்டத்திலும் ‘ரெட் அலர்ட்’ இல்லை. 9 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’டை இந்திய வானிலை மையம் விலக்கிக் கொண்டது.

கேரளாவில் வெள்ளமும் வடியவில்லை, சோகமும் வடியவில்லை!

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Kerala floods 2018pm narendra modi visit

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X