கடந்த புதன் கிழமை, காபூலிலுள்ள குருத்வாராவைத் தாக்கி 25 பேரைக் கொன்ற மூன்று நபர்களில் ஒருவர், கேரளாவிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர் என சந்தேகிக்கப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகளால் அவரது பெயர் முகமது முஹ்சின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இப்போது அவர்கள் கண்ணூரில் வசிக்கிறார்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய அரசு பத்திரிகையான, ’அல் நாபா’, தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை அபு காலித் அல்-இந்தி என்று அடையாளம் காட்டும் படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தப் படத்தில் இருப்பது தங்கள் மகன் தான் என முஹ்சினின் பெற்றோர் அடையாளம் கண்டுள்ளனர்.
“காபூல் தாக்குதலில் உங்களது மகன் தியாகியாகிவிட்டான் என்று முஹ்சினின் ஐ.எஸ் கூட்டாளியிடமிருந்து டெலிகிராம் வழியாக ஒரு செய்தி வந்ததாக முஹ்சினின் தாயார் கூறினார். செய்தியைக் காட்டும்படி நாங்கள் அவரிடம் கேட்டபோது, பயத்தால் அதை நீக்கிவிட்டதாக சொன்னார். இப்போதைக்கு குடும்பத்தின் உரிமைகோரல் எங்களிடம் உள்ளது” என்று மத்திய மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
Advertisment
Advertisements
கேரளாவிலிருந்து ஐ.எஸ். உடன் இணைந்த இரண்டு முகமது முஹ்சின்கள் உள்ளனர் என்று மத்திய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை 2019-ல் அமெரிக்க வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டவருடன், காபூல் தாக்குதல் நடத்தியவரை இணைத்து குழப்பமடையக்கூடாது எனவும் கூறினர். அந்த முஹ்சின் மலப்புரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, 2017-ல் ஐ.எஸ். அமைப்பில் இணைந்தவர்.
காபூல் குருத்வாராவைத் தாக்கிய முஹ்சின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள திரிக்காரிப்பூரைச் சேர்ந்தவர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோரசன் மாகாணத்திலுள்ள ஐ.எஸ் அமைப்பில் சேர 2018-ல் ஆப்கானிஸ்தானுக்கு புறப்பட்டார். அதோடு, காசர்கோடு மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த இரண்டு டஜன் இளைஞர்கள் 2016-ல் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார், கேரளாவைச் சேர்ந்த 21 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு. ”பயனூரைச் சேர்ந்த முஹ்சின் துபாயில் வேலை தேடி 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் துபாயில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்றார்” என்று கேரள மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். திரிக்காரிப்பூர் (காசர்கோடு) வடக்கு கேரளாவில் உள்ள, பயனூருக்கு (கண்ணூர்) மிக அருகில் உள்ள ஒரு சிறிய நகரம்.
“அவருக்கு (முஹ்சின்) 28 வயது என்று கூறப்படுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். 2018-ல் துபாய் சென்ற அவர், அங்கிருந்து ஆப்கானிஸ்தான் சென்றார். அவரது குடும்பம் கண்ணூரில் வசிக்கிறது” என்று மத்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
”காபூல் தாக்குதல் நடத்தியவர்களில் யாராவது இந்தியரா என்பதை அறிய, புலனாய்வு அமைப்புகள் முயற்சிக்கின்றன” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
”இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை,” என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. திருத்தப்பட்ட என்ஐஏ சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களில் யாராவது இந்தியராக இருந்தால், வெளிநாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய அரசு ஏற்க முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"