மத்திய மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் நேற்று நீட் பற்றிய மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன்படி இனி வரும் வருடங்களில் வருடத்திற்கு இரண்டு முறை நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நடைபெறும்.
இந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் வருகின்ற டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு முறை நீட் தேர்வினை எழுதலாம்.
இனி வரும் வருடங்களில் நீட் தேர்வு பிப்ரவரி மாதத்திலும் மே மாதத்திலும் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
பல்வேறு மக்களுக்கு இந்த இரட்டைத் தேர்வு முறையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக கீழே காணலாம்.
நன்மைகள்
மாணவர்கள் தோல்விகளால் துவண்டு போக மாட்டார்கள். குறுகிய கால இடைவெளிகளிலே இந்த தேர்வுகள் நடைபெறுவதால் அவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு தருவது நல்லது.
நீட் தோல்வியால் மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொள்ளமாட்டார்கள்.
பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வினை ஒரு மாதிரி தேர்வாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால், நீட் எப்படி நடக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கி தேர்வெழுதலாம் என்பதைப் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும்.
மன உளைச்சல் இல்லாமல் மாணவர்கள் பயமின்றி நீட்டினை எதிர் கொள்ளலாம்.
ஒரு மாணவர் இரண்டு முறை நடக்கும் தேர்வுகளிலும் பங்கேற்று தேர்வு எழுதலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கின்றாதோ அதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
இந்த இருமுறைத் தேர்வால் ஏற்படும் பிரச்சனைகள்
நீட் தேர்விற்கென கட்டப்படும் கட்டணத் தொகை இருமடங்காகும். இதனை குறைப்பதற்கான வழிகளை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டு முறை தேர்வுகள் நடைபெறுவதால் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
இந்த தேர்வு முறையால் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படும். எந்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்வது போன்றவை குழப்பத்தினைத் தரும்.
கணினி வழித் தேர்வாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூக சூழல்கள் கொண்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு கணினி வழி தேர்வு முறை இன்னும் சிக்கலானதாக இருக்கும்.
ஜவடேகர், மாணவர்கள் யாரெல்லாம் சொந்தமாக கணினி வைத்திருக்கவில்லையோ அவர்களுக்கு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். நடைமுறையில் இவ்வளவு பெரிய திட்டங்கள் சாத்தியமா என்பது தெரியவில்லை.
பாடத்திட்டங்கள், சிலபஸ், கட்டணம் குறித்து இதுவரை எந்த தகவலும் பிறப்பிக்கப்படவில்லை.
வாய்வழிப்பாடங்கள் சொல்லிக் கொடுக்கவே நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிக அளவு மாணவர்களிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள். இந்நிலையில் கணினி மையமாக்கப்பட்டால் பயிற்சி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள்.
மீண்டும் இது ஏழை, நடுத்தர மக்களுக்கு சிக்கலான படிப்பு மட்டும் நுழைவுத் தேர்வு முறையாகவே அமைந்துவிடும்.
ஒருங்கிணைந்த, புதிய தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படும் என்று கூறினார் ஜவடேகர். இதற்கு முந்தைய சிபிஎஸ்சி அமைப்பால் நடத்தப்பட்ட தேர்வுகளினால் ஏற்பட்ட குளறுபடிகள் தவிர்க்கப்படுமா என்பது இன்னும் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.