கேரளா வெள்ளம் : உதவிக்கரம் நீட்டும் பிற மாநிலங்கள்:
கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதுவரை கேரளா வெள்ளம் பாதிப்பால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண பொருட்களை அனுப்புவது எப்படி? தகவல்கள் இங்கே
கேரளாவில் இதுவரை பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைந்திருந்தாலும், வெள்ள நீர் வற்றுவதில் கடினம் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
அம்மாநிலத்திற்கு உதவ கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் இருந்து 2 நாட்டுப்படகுகளில் 8 மீனவர்கள் நேற்று திரிச்சூர் சென்றுள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் என நேற்று மட்டும் 280 பேரை தூத்துர் மீனவர்கள் மீட்டு, மீட்பு முகாம்களில் தங்க வைத்தனர். இன்று 2 பிரிவாகப் பிரிந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?
கேரள மாநிலத்தின் வெள்ளத்தில் இருந்து மீண்டு வர பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண தொகை குவிந்து கொண்டே வருகிறது. பிற மாநிலங்களில் அரசு நிவாரண தொகையை அளித்து வருகிறது. மத்திய அரசு இதுவரை முதற்கட்ட நிவாரணப் பணி தொகையாக 500 கோடி ஒதுக்கியுள்ளது.
கேரளா வெள்ளம்: 34 கோடி தந்த கத்தார் நாடு:
இந்நிலையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கத்தார் நாடு அம்மாநிலத்திற்காகவும், மக்களை காப்பாற்றுவதற்காகவும் சுமார் 34 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது.கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, கேரளாவிற்கு முதல்கட்டமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34.89 கோடி) நிவாரண நிதி வழங்குவதாக நேற்று அறிவித்தார். கேரள சொந்தங்களை காப்பாற்ற எங்களால் முடிந்த உதவியைச் செய்துள்ளோம் என கத்தார் மன்னர் தெரிவித்துள்ளார்.