பீமா கோரேகான் வழக்கு வீட்டுக் காவல் நீட்டிப்பு : ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்ட்ரா மாநிலம், பீமா கோரேகான் பகுதியில் மஹர் என்ற தலித் இனத்தவர்கள், வரலாற்று நிகழ்வு ஒன்றின் 200வது ஆண்டு விழாவிற்காக ஒன்று திரண்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் மாவோயிஸ்ட்டுகளின் தலையீடு இருக்கிறது என்று ஜூன் மாதம் ஐவரை கைது செய்தது புனே காவல்துறை.
மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவல்
அவர்கள் முறையே வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தலித் உரிமைகளுக்கான போராளி சுதிர் தாவாலே, பிரதம மந்திரியின் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் ராவுட், நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷோமா சென், மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோர்கள் ஆவார்கள்.
ரோனா வில்சனின் வீட்டில் இருந்து கைப்பற்ற துண்டுப் பிரசுரங்களில் ”ராஜீவ் காந்தியைப் போலவே நரேந்திர மோடியை கொலை செய்வதற்கான திட்டங்களில் தொடர்புடைய ஐவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன” என்று புனே காவல்துறை கூறியது.
சமூக செயற்பாட்டாளர்கள் கைது
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் 28/08/2018ம் தேதி இந்தியாவின் மிக முக்கிய செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, மற்றும் வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகியோர்களை கைது செய்தது புனே காவல்துறை. கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள
இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் ரோமிலா தாப்பர் மற்றும் சில தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
மாற்றுக் கருத்து தான் ஜனநாயகத்தை வாழ வைக்கிறது
விசாரணை முடிவில் ஐவரையும் செப்டம்பர் 5ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைத்து உத்தரவிட்டது. மேலும் இந்த கைதுகள் தொடர்பாக எதன் சார்பில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூறி உத்தரவிட்டது. அது தொடர்பான முழுமையான செய்தியினைப் படிக்க
மகாராஷ்ட்ரா காவல்துறைக்கு கண்டனம்
இன்று மகாராஷ்ட்ரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “புனே காவல் துறையினர் கைப்பற்றிய ஆவணங்களைப் பார்க்கும் போது, கைது செய்யப்பட்டவர்கள் எப்படியாக மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை உங்களால் அறிய முடியும்” என்று கூறினார்.
இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட் “இது போன்ற விவகாரங்கள் நீதிமன்றங்களில் இருக்கும் போது பொறுப்புடன் காவல்துறை செயல்படுவதை மகாராஷ்ட்ரா அரசு உறுதி செய்திருக்க வேண்டும் என்றும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு காவல்துறை ஏற்பாடு செய்ததையும் கண்டித்தார். பின்பு வருகின்ற 12ம் தேதி கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கக் கோரி உத்தரவிட்டார்.