ரபேல் ஊழல் : காங்கிரஸ் கட்சியின் ஒப்பந்தம் முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கீடு வரை ஒரு பார்வை - Things you need to know about Rafale Aircraft deal | Indian Express Tamil

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன?

ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனமே உருவாக்கப்பட்டது…

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன?
ரபேல் ஊழல்

ரபேல் ஊழல் : இந்தியாவில் போர் விமானங்களின் தேவை குறித்து அவ்வபோது ஆய்வு செய்யப்படுவதும், அதற்கான முதலீட்டில் இறங்குவதும் வாடிக்கையான ஒன்று. இந்திய விமானப் படையில் கடைசியாய் சேர்க்கப்பட்ட போர் விமானம் 1996ல் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட சுகோய் விமானம் ஆகும். அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு போர் விமானங்களையும் இந்தியா பெறவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்

போர் விமானங்களின் தேவை உணரப்பட்ட பின்பு 126 போர் விமானங்களை வாங்குவதற்காக ஏற்பாடு செய்தது மன்மோகன் சிங் அரசு. இதற்காக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளை பட்டியலில் வைத்திருந்தது இந்திய அரசு. பின்னர் 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

126 போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் அதில் 18 விமானங்களை மட்டுமே பிரான்ஸ் நாடு பறக்கும் நிலையில் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் மீதம் இருக்கும் 108 விமானங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப விபரங்களை இந்தியாவிற்கு தர வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

108 விமானங்களை தயாரிப்பதற்கு ஏற்ப இடங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் முன்னேற்பாடாக செய்து வைத்திருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் மற்றொரு மைல் கல்லினை எட்டுவதற்காகவும் தயார் நிலையில் இருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்.

இந்தியாவில் தயாராக இருந்த 108 விமானங்களையும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் தயாரிப்பதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  2014ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய பாஜக ஆட்சி அமைத்தது.

ரபேல் ஊழல், ரபேல் போர் விமானம், ரஃபேல் போர் விமானம்
ரபேல் போர் விமானம்

பாஜக அரசில் போடப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம்

2015ம் ஆண்டு அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.

புதிதாக ஒப்பந்தம் ஒன்றிற்கு கையெழுத்திட்டார் மோடி. அதன்படி 18 விமானங்களுக்கு பதிலாக பறக்கும் நிலையிலேயே சுமார் 36 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக கூறினார்.

பறக்கும் நிலையில் விமானங்கள் வாங்கப்பட்டாலும் அதனுள் பல்வேறு தொழில் நுட்பக் கருவிகளை பொருத்தும் பணியையும் அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியையும் இந்தியா மேற்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸல்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு தர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாத நிலையில் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறது டஸ்ஸல்ட் நிறுவனம்.

காங்கிரஸார் குற்றச்சாட்டு – ரபேல் ஊழல்

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள் நாட்டிலேயே விமானங்களை தயாரிக்காமல் எப்படி அனைத்து விமானங்களையும் பறக்கும் நிலையிலேயே வெளியில் இருந்து வாங்க கூடும் என்று கேள்வி எழுப்பினர்.

பல்வேறு ஆண்டுகளாய் அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனம் இருக்கும் போது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

58,000 கோடி ரூபாய் என்பது அதிக பட்ச விலை என்றும், காங்கிரஸ் கட்சி இறுதி செய்து அறிவித்த தொகையை விட 3 மடங்கு அதிக பணம் இதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினர்.  மக்களின் வரிப்பணத்தையும் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 79200 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையை கணக்கிட்டுப் பார்க்கும் போது 36 விமானங்களின் விலை என்னவோ 22600 கோடி ரூபாய் தான். ஆனால் 36 விமானங்களை ஏன் 58000 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் ஹோலண்டேயின் சர்ச்சை பேச்சு

ரபேல்  ஊழல் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்டே ”எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தினை தேர்வு செய்வதைத் தவிர வேறெந்த வாய்ப்புகளையும் இந்திய அரசு தரவில்லை” என்று குறிப்பிட்டு பேசினார். அது குறித்த முழுமையான செய்திகளைப் படிக்க

இதுவரை தொடர்ந்து “டஸ்ஸல்ட் நிறுவனம் தனக்கான ஆஃப்செட் பார்ட்னர்களை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது” என பாஜகவினர் கூறிவந்தனர்.

ஹோலண்டேவின் கருத்து வெளியானதும் “காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மோடியை திருடர் என்றும், நம் நாட்டு ராணுவத்தினரின் ரத்தம் அவமதிக்கப்பட்டது என்றும்” ட்விட்டரில் கருத்து கூறினார்.

இந்நிலையில் நேற்று, ரபேல் ஒப்பந்தம் மற்றும் ரபேல் ஊழல் குறித்து முறையான முழுத் தகவல்களையும் விசாரணையையும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மனு ஒன்று வைக்கப்பட்டது. மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க

ரபேல் ஊழல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன ?

ரிலையன்ஸ் நிறுவனம் பல வருடங்களாக பாதுகாப்புத் துறையில் இருந்து வருகிறது என்று ஒரு வாதம் முன் வைக்கப்பட்டாலும், 2015ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி தான் தன்னுடைய ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை துவங்கியது. சற்றே சரியாக சொல்லப் போனால் நரேந்திர மோடி ப்ரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான்.

2016ம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார் ஃபரான்கோய்ஸ் ஹோலண்டே.  அதே சமயத்தில் ஹோலண்டேவின் காதலி ஜூலி கயேத் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் அறிவித்தது.

பிரான்கோய்ஸ் ஹோலண்டேவின் காதலியை வைத்து படம் தயாரித்த ரிலையன்ஸ்

2016ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் பிரான்ஸ் அதிபரின் காதலியை கதாநாயகியாக கொண்டு, ரோக் இண்டெர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்ச் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறியது. ஜனவரி 26, 2016ல் இந்தியாவும் ஃப்ரான்ஸூம் 36 போர் விமானங்களை வாங்குவதற்காக கையெழுத்திட்டது.

ரபேல் போர்  விமானங்கள் தயாரிக்கும் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணி  கையெழுத்தான பின்பு,  எட்டு வாரங்கள் கழித்து ரிலையன்ஸ் தயாரித்த பிரெஞ்ச் படமானது 2017 டிசம்பரில் வெளியிடப்பட்டது.

டவுட் லா ஹௌட் என்ற தலைப்பில் வந்த அந்த படம் அமீரகம், தைவான், லெபனான், பெல்ஜியம், எஸ்டோனியா, மற்றும் லட்டோவியா ஆகிய நாடுகளில் வெளியானது.  98 நிமிடம் ஓடும் இந்த படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Things you need to know about rafale aircraft deal