Tirupati Balaji Temple Says Its Running Out Of Cash To Pay Salaries : கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும். 50 நாட்கள் கடந்தும் ஊரடங்கு நீடித்து வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில் அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படாமல் முடங்கியுள்ளது. போதுமான வர்த்தகம், வருமானம் ஏதுமின்றி இந்தியப் பொருளாதாரம் மேலும் பாதாளம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல மத வழிபாட்டுத் தலங்களும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. உலகின் மிக செல்வச்செழிப்பான கடவுள் என்று அறியப்படும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பெரிய அளவில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்த லாக்டவுனில் ரூபாய் 400 கோடி வரை இழந்துள்ளதாக அறிவிக்கும் திருப்பதி தேவஸ்தானம், ரூ. 300 கோடியை அங்கு பணியாற்றுபவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தேவஸ்தானத்தில் பணியாற்றும் பலருக்கும் சம்பளம் தர இயலாத நிலை உருவாகியுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் கோவிலின் பராமரிப்பு மற்றும் பூஜைகளுக்காகவே ரூ. 2,500 கோடியை செலவிடுகிறது திருப்பதி தேவஸ்தானம். இந்த நிதி ஆண்டில், திருப்பதி தேவஸ்தானத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டும் ரூ. 1400 கோடி தேவைப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த மாதத்திற்கு மட்டும் சம்பளம் மற்றும் பென்சன் தொகையாக ரூ. 120 கோடி செலவிட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் கோவில் அறக்கட்டளை மூலமாக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு ரூ. 400 கோடி செலவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் நபர்கள் வரை வருகை தரும் இந்த கோவில் தசரா மற்றும் மகா உற்சவம் சமயத்தில் 1 லட்சம் நபர்கள் வரை வருகை புரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில் திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் வைத்திருக்கும் 14 ஆயிரம் கோடியை எடுக்கவோ, அக்கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான 8 டன் தங்கத்தையோ செலவிற்காக எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”