லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியதால் கடந்த மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாட்டு எல்லை நெடுகிலும் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன் பதற்றமும் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 6ம் தேதி ஒருமித்த முடிவை எடுத்தன. அதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கி வந்தன.
இந்த பதற்றத்தணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 15ம் தேதி இரவில் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
சீனாவை விட புவியியல் அமைப்பு இந்திய விமானப் படைக்கு சாதகம் ஏன்?
சீன ராணுவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க சீன ராணுவம் மறுக்கிறது. ஆனால், சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சீன, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையால் பதற்றம் அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது.
இது மிகவும் கடினமான சூழல். நாங்கள் இந்தியாவிடமும் பேசி வருகிறோம். சீனாவிடமும் பேசி வருகிறோம். அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. இரு நாடுகளிடையே நல்ல சூழல் நிலவவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வோம். எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் சீனா, இந்தியாவுக்கு உதவுவோம். அதற்காக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று கொரோனா தாக்கத்திற்கு பிறகு, ஓக்லஹோமில் நடைபெறவுள்ள தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள கிளம்புவதற்கு முன்பு டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவாகவே அமெரிக்கா தொடரந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் சிக்கலில் நாடுகள் இருக்கும்போது, இந்தியாவிடம் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிடமும் எல்லைப் பிரச்சினையை சீனா தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய மற்றும் சீனாவுக்கான 2020 ஆம் ஆண்டு சவால்கள் என்ற மாநாட்டில், சீனாவைக் கடுமையாக விமர்சித்தார். சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மூர்க்கத்தனமாக நடக்கிறது என்று விமர்சித்திருந்தார். குறிப்பாக, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு ‘‘rogue actor’ என்று பாம்பியோ வர்ணித்தார்.
ஆயுதங்களோடு இருந்த ராணுவ வீரர்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை?
இந்த வார தொடக்கத்தில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி கூறுகையில், அதிபர் நிலைமையை அறிந்திருப்பதாகவும், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான நிலைமையை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
ஜூன் 2 ம் தேதி டிரம்ப், பிரதமர் மோடியுடன் ஒரு தொலைபேசி அழைப்பின் போது, இந்தோ-சீனா எல்லையில் நிலைமை குறித்து விவாதித்ததாக மெக்னானி கூறினார்.
“டிரம்பிற்கும் மோடிக்கும் இடையே ஒரு அபார உறவும் நம்பிக்கையும் உள்ளது” என்று Trump Victory Indian American Finance Committee நிதிக் குழுவின் இணைத் தலைவர் அல் மேசன் கூறினார், வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை மற்றும் புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவற்றிலிருந்து வரும் அறிக்கைகள் இத்தகவலை உறுதி செய்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil