அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வருவார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு நாள் பயணத்தின் போது புது தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை விசிட் செய்கிறார் டிரம்ப்.
அறிக்கையின் படி, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஸ்டெபானி கிரிஷாம், “வார இறுதியில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் இந்த பயணம் குறித்து தொலைபேசியில் பேசினர். இது அமெரிக்க-இந்திய கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்தும்” என்றார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் பயணத்தைப் பற்றி, “மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைமைத்துவத்திலும் முக்கிய பங்கு வகித்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதியை கெளரவிக்கும் விதமாக, ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்த இந்திய தரப்பு திட்டமிட்டிருக்கும் அதே வேளையில், ஜனாதிபதி ட்ரம்பிற்கு அளிக்கப்படும் வரவேற்பு “ஒபாமாவிற்கு கொடுத்ததை விட பெரியதாக இருக்க வேண்டும்” என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
Advertisements
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலை எதிர்கொள்ளும் டிரம்ப், தனது பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்து விடுவார் என்று தெரிகிறது. சில எஃகு மற்றும் அலுமினிய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா விதித்த உயர் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், சில உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி சலுகைகளை அவற்றின் பொதுப்படுத்தப்பட்ட விருப்பத்தேர்வுகளின் கீழ் மீண்டும் தொடங்க வேண்டும். வேளாண்மை, ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள் போன்றவை பெரியளவில் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது.
மறுபுறம், அமெரிக்கா தனது பண்ணை உற்பத்தி பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு அதிக சந்தை அணுகலை இந்தியாவிடம் எதிர்பார்க்கிறது. இந்தியாவுடனான வர்த்தக பற்றாக்குறை குறித்து அமெரிக்காவும் கவலைகளை கொண்டுள்ளது.
பாதுகாப்பு கொள்முதல் விஷயத்திலும் சிறிது முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. போர் விமானங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. லாக்ஹீட் மார்ட்டின் தனது முழு எஃப் -16 உற்பத்தி தளத்தையும் இந்தியாவுக்கு நகர்த்த முன்மொழிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil