Will welcome India’s peace initiative for de-escalating tensions with US: Iran - போர் பதற்றம்! 'இந்தியாவின் சமாதான முன்னெடுப்பை வரவேற்கிறோம்' - ஈரான்
பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு அமெரிக்கா பின்னர் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் சுலைமானிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்தியா இந்த பிராந்தியத்தில் உள்ளது. பதற்றங்கள் அதிகரிப்பதை அனுமதிக்காத அனைத்து நாடுகளிடம் இருந்தும், குறிப்பாக எங்களின் நல்ல நட்பு நாடான இந்தியாவிடம் இருந்து, அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
நாங்கள் போரை விரும்பவில்லை. இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் அமைதி மற்றும் செழிப்பை எதிர்பார்க்கிறோம். இந்த உலகில் அமைதி மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில், இந்தியாவின் எந்தவொரு சமாதான முயற்சி அல்லது திட்டமாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
பொதுவாக இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவையும் பரிவும் கொண்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரிப், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரை இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.