இலங்கையின் கொழும்பு நகரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம்(ஏப்.21) தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது காலை 8.45 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன்பின் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து இருந்தன.
Sri Lanka Bomb Blast: கொழும்பு செல்லும் தேசிய புலனாய்வு குழு
இந்த நிலையில், வேனில் இருந்த வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் நேற்று(ஏப்.22) ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இந்த முயற்சியில் வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு நகரில் மொத்தம் 9 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவரை 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு யார் காரணம்? விசாரணையை தீவிரப்படுத்தும் அரசு!
இந்தச் சூழ்நிலையில், இன்று(ஏப்.23) வெடிகுண்டுகள் நிரப்பிய லாரி மற்றும் வேன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கொழும்புவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உச்சக்கட்ட உஷார் நிலையில் உள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்று இருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.