சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர். ஆனால், மேலும் 2 பேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் மற்றும் தும்மல் காரணமாக கிறிஸ்துவ மத விழா ஒன்றில் இருந்து போப் ஃபிரான்சிஸ் கடைசி நேரத்தில் விலகியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போப் பிரான்சிஸ் கலந்து கொள்வதாக இருந்த விழாவிற்காக, வாடிகனில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 2) திடீர் என்று இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று போப் பிரான்சிஸ் அறிவித்தார். நேற்று மதியம் ரோம் நகரில் மக்கள் முன்னிலையில் தோன்றி பேசிய பிரான்சிஸ், ” எனக்கு உடல் நிலை சரியில்லை. எனக்கு தொடர் இருமல் ஏற்படுகிறது. அதனால் என்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது. நான் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். நான் விழாவிற்கு வரவில்லை என்றாலும் உங்களுடன் எப்போதும் இருப்பேன். மத ரீதியாக, ஆன்மா ரீதியாக எப்போதும் உங்களுடன் இருப்பேன். நான் என்னுடைய வீட்டில் இருந்து வழிபாடுகளை தொடர்வேன். தொடர்ந்து வழிபாடுகளை நடத்துவேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். போப் பிரான்சிஸ் எப்படி போப் பிரான்சிஸ் இந்த அறிவிப்பை வெளியிடும் போதே அவர் மீண்டும் மீண்டும் இருமினார். பலமுறை இவர் அடுத்தடுத்து இருமியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
சனிக்கிழமை இரவு நிலவரப்படி, நிகழ்ச்சி தொடங்கவிருந்த கடைசி நிமிடத்தில், அதிலிருந்து விலகுவதற்கான முடிவை போப் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியை ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ்
சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான், டயமண்ட் பிரின்சஸ் (ஜப்பான் கப்பல்), ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்சு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரானில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 41 பேர் இந்த வைரசால் பலியாகி உள்ளனர்.
இத்தாலியில் சுமார் 1200 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவுடன் தொடர்பில் இல்லாத நாடுகளிலும் பரவும் கொரொனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கவலை
இத்தாலியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இது அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் 85 இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது. இந்த 85 மாணவர்களும் இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பவியா நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் விடுதிகளிலும், வீடுகளிலும் முடங்கியுள்ளனர்.
இந்த 85 மாணவர்களில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 25 பேர் தெலுங்கானா, 20 பேர் கர்நாடகா, 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். டெல்லி, ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு உள்ளனர்.
85 இந்திய மாணவர்களையும் சிறப்பு விமானம் அனுப்பி மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.