Sri Lanka blasts President Sirisena Comment : இலங்கையில் புனித ஞாயிறு அன்று 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. முதலில் தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் வெடிகுண்டு நிகழ்வுகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து அன்று மாலையும், அடுத்த நாள் காலையிலும், கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்க இயலாமல் மேலும் சில இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்தன.
அரசே காரணம்
இலங்கை மற்றும் இந்திய புலனாய்வு அதிகாரிகள் இது குறித்து பேசுகையில், ஏற்கனவே முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. இருந்தும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது என்றால் அதற்கு அந்நாட்டு அரசின் கவனக்குறைவே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகள் நிலவி வருகின்றன. இந்த வருடத்தின் இறுதியில் அந்த நாட்டில் தேர்தல்கள் நடைபெற இருப்பதால், இந்த வெடிகுண்டு நிகழ்வுகள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறுகையில், இந்நாட்டின் அரசு பாதுகாப்பு பணிகளை திறம்பட செய்ய மறந்துவிட்டது. இந்த வெடிகுண்டு நிகழ்வுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்று கூறிய அவர், புலனாய்வுத் துறை தலைவர் மற்றும் காவல்துறை தலைவர் தங்களின் பொறுப்புகளை உரிய முறையில் செய்யாமல் விட்டதால் தான் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அவர்கள் இருவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் Vs அதிபர்
இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு விக்ரமசிங்கே தலைமையிலான அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஆண்டு, அவரை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்க முடிவு செய்து அதில் தோல்வி அடைந்தார் சிறிசேனா என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நடத்தபட்ட வெடிகுண்டு நிகழ்வுகளில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளில் நன்றாக படித்தவர்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.