Tamil Health Tips: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பருப்பு வகைகளில் பாதாம் பருப்புக்கு முக்கிய இடம் உண்டு.
புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம், எடை இழப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதவிர, பாதாம் இதய ஆரோக்கியத்திற்கும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.இதை பச்சையாகவோ அல்லது ஊறவைத்தோ சாப்பிடலாம்.
பெரும்பாலான சுகாதார நிபுணர்களால் பலவிதமான நன்மைகளுக்காக பாதாம் பரிந்துரைக்கப்பட்டாலும், ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது சிறந்தது என்று கேள்வி பலரிடம் உள்ளது.
இதுதொடர்பாக பேசிய டெல்லியின் பிராந்தியத் தலைவர் ரித்திகா சமதர், ஒருவர் தினமும் 1 அவுன்ஸ் அல்லது 28-30 கிராம் பாதாம் சாப்பிடலாம். அதாவது, 22-23 பாதாம் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், " ஆய்வின்படி, பாதாம் பருப்புகளை தவறாமல் சாப்பிடுவது மத்திய கொழுப்பு (தொப்பை கொழுப்பு) மற்றும் இடுப்பு சுற்றளவைக் குறைக்க உதவுகிறது. உங்கள் எடையை சிறப்பாக நிர்வகிக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
மேலும் பாதாம் தொடர்பான சில கட்டுக்கதைகளையும் சமதர் விவரித்துள்ளார்.
பாதாமில் கொலஸ்ட்ரால் அதிகம்
பாதாமில் ஜீரோ கொலஸ்ட்ரால் உள்ளது. தாவரப் பொருட்களான எதிலும் கொலஸ்ட்ரால் கிடையாது. பாதாம் நீரிழிவு அல்லது இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், பாதாமில் பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் இருப்பதால், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார்.
பாதாம் என்பது 'கரம்'
இந்தியாவில் கரம் (சூடான) மற்றும் தண்டா (குளிர்) என்ற கருத்து உள்ளது. பாதாம் பருப்பு அதிகமாக உட்கொண்டால், உடலுக்கு நல்லதல்ல என்றும், அது மிகவும் 'கரம்' என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒரு நாளைக்கு 4-5 பாதாம் பருப்புகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம். மாறாக, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்குப் பதிலாக தினமும் 22 முதல் 23 பாதாம் பருப்புகளை சாப்பிடுவது, இதயத்தைப் பாதுகாக்கும் மற்றும் நீரிழிவு நோய்க்கு நல்லதாகும்.
சாப்பிடுவதற்கு முன் பாதாம் தோலை அகற்ற வேண்டும்
பெரும்பாலோர் சாப்பிடுவதற்கு முன் பாதாமை ஊறவைத்து உரிக்கிறார்கள். ஊறவைப்பது நல்லது, ஏனெனில் இது நுண்ணூட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆனால் தோலை உரிக்காமல் இருக்க வேண்டும். தோலை உரிக்கும்போது, நார்ச்சத்து இல்லாமல் போகிறது. நீங்கள் அதை ஒருபோதும் உரிக்கக்கூடாது என்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil