பொன்னாங்கன்னி கீரையின் மகத்துவம் மற்றும் மருத்துவ பயன்கள் குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் சிவராமன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
குழந்தைப் பருவம் முதலே பொன்னாங்கன்னி கீரையை சாப்பிடக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டுமென மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பொன்னாங்கன்னி கீரை அதிகமாக புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது பொன்னாங்கன்னி கீரை அரிதாகவே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பொன்னாங்கன்னி கீரை சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டுமே உடலுக்கு அதிகப்படியான சத்துகளை கொடுக்கும் எனவும், இதனை சித்த மருத்துவத்தில் பொன்+ஆம்+கான்+நீ எனப் பிரித்து கூறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் சருமம் தங்கம் போல் ஜொலிக்கும் என பழங்காலத்தில் இருந்து சொல்லப்படுவதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதேபோல், கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதையும் பொன்னாங்கன்னி கீரை தடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "போன கண்ணும் திரும்புமாம், பொன்னாங்கன்னி கீரையாலே" என தமிழில் ஒரு சொலவடை இருப்பதாகவும் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அந்த அளவிற்கு கண்ணின் அனைத்து பகுதிகளுக்கு பொன்னாங்கன்னி கீரை வலு சேர்க்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் சூட்டை தணிக்க பொன்னாங்கன்னி கீரை தைலத்தை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். தலை முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படும் தைலங்களிலும் பொன்னாங்கன்னி கீரையின் சத்துகள் காணப்படும்.
சிவப்பு பொன்னாங்கன்னியில் சத்துகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. இவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும். இவற்றில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமாக இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். பொன்னாங்கன்னி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் இரசாயனம் கலந்த கீரைகள் வாங்குவதை தடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இரும்புச் சத்து பொன்னாங்கன்னி கீரையில் நிறைந்திருக்கிறது. முதுமையில் நோய்களை தடுக்க வேண்டுமானால் இளமையிலேயே பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“