Bottle Gourd Curry in tamil: நாம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளுள் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. நீர்ச்சத்து நிரம்பி காணப்படும் இந்த அற்புதமான காய்கறியில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகம் கொடுக்கும் எனவும், மற்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், இவை உடல்சூட்டை தணிக்க வல்லதாகவும், சிறுநீரகம், நாவறட்சி, கண்நோய்கள், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள சுரைக்காயில் சூப்பரான குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
சுரைக்காய் குருமா செய்யத்தேவையான பொருட்கள்:-
அரைக்க:
கசகசா - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சூரியகாந்தி விதைகள் - 1 தேக்கரண்டி
பூசணி விதைகள் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
சுரைக்காய் - 1 கப்
தக்காளி - 1 கப்
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு சில தழை
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு வெந்நீர் எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை இட்டு ஊற வைத்துகொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு பட்டை, சிறிதளவு சோம்பு, ஆகியவற்றை சேர்க்கவும்.
தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய சுரைக்காய் சேர்க்கவும். இவற்றை 5 நிமிடங்களுக்கு வேக விட பாத்திரத்தை ஒரு மூடி இட்டு மூடிக்கொள்ளவும்.
இதற்கிடையில் முன்னர் அரைக்க ஊறவைத்த பொருட்களுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
சுரைக்காய் நன்கு வெந்த பிறகு அரைத்துள்ளவற்றை அவற்றுடன் சேர்க்கவும்.
தொடந்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடங்களுக்கு நன்கு வேக விடவும். இந்த தருணத்தில் வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்.
சுரைக்காய் குருமா நன்கு கொதித்து வந்த பிறகு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும். நன்கு மிக்ஸ் செய்த பிறகு கொத்தமல்லி தழைகளை தூவி கீழே இறக்கவும்.
இப்போது உங்களுக்கு பிடித்தமான இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என எல்லாவற்றுடனும் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.