Cauliflower recipes in tamil: நம்முடை அன்றாட உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய்கறிகளுள் ஒன்றாக காலிஃப்ளவர் உள்ளது. இவற்றை நாம் கூட்டு, பொரியல், வறுவல், குருமா என பல வடிவங்களில் ருசித்து மகிழ்ந்து வருகிறோம். இந்த அற்புத காய்கறி மிகப் பழங்காலத்திலிருந்து பல நாடுகளில் முக்கிய உணவாக இருந்து வருகிறது. இவற்றில் உள்ள சத்துக்களை நாம் முழுமையாக பெற, இவற்றை 5 நிமிடத்திற்குமேல் நெருப்பில் வதக்கவோ, வாட்டவே கூடாது என சமையல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

காலிஃப்ளவர் நடுத்தர வயதினருக்கும், வயதானவர்களுக்கும் உடல் வலிமை கிடைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளன. இவற்றை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடலில் எடையையும் குறைத்துக் கொள்ள உதவுகிறது. இன்னும் எண்ணற்ற அற்புத நன்மைகளை கொண்டுள்ள காலிஃப்ளவரில் சுவையான மற்றும் சத்தான சூப் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

காலிஃப்ளவர் சூப் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 1,
பால் – ஒரு கப்,
மிளகுத்தூள் – சிறிதளவு,
கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 5 பல்,
வெண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

காலிஃப்ளவர் சூப் சிம்பிள் செய்முறை
முதலில் காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பூவை மட்டும் எடுத்து துருவிக்கொள்ளவும்.
பின்னர் காலிஃப்ளவர் தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதோடு பூண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
பிறகு வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறவும்.
அவற்றை அப்படியே கீழே இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் சுவையான காலிஃப்ளவர் சூப் தாயார். இந்த சூப்பை ஒரு கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவி பருக தொடங்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“