மனிதர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச் சத்து இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுரை கூறுகின்றனர். ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமிடுவது புரதச் சத்து என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புரதச் சத்து அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என சமீப காலமாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தக் கூற்றில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
உதாரணமாக, நம் உடலை ஒரு கட்டடமாக எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் புரதம் என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். தீவிர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தான் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தவறான புரிதலும் சிலரிடையே நிலவுகிறது.
உடலில் இருக்கும் செல்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் என அனைத்தும் புரதம் தான் என அருண் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு நபர் 60 கிலோ எடையில் இருந்தால் அவர் ஒரு நாளைக்கு சுமார் 60 கிராம் புரதம் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அத்தியாவசியம் நிறைந்த புரதம் எப்படி சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அருண் குமார் கேள்வி எழுப்புகிறார். ஏற்கனவே, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புரதத்தை சரியாக வெளியேற்றும் தன்மை குறைவாக இருக்கும் எனக் கூறும் அவர், அதனால் தான் சிறுநீரக கோளாறு இருப்பவர்களை புரதம் கம்மியான அளவு எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நம் ஊரில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதில் சுமார் 70 முதல் 80 சதவீத பங்கு சர்க்கரை நோய்க்கு இருப்பதாகவும், 10 முதல் 20 சதவீத பங்கு இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது எனவும் மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார். நல்ல புரதம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, மாவுச்சத்துகளை குறைத்து சாப்பிட்டால் பலருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படாது என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.