இனிப்பு மோகத்தை விட முடியலையா? காலை உணவு இப்படி சாப்பிட்டா பெரிய மாற்றம்: டாக்டர் இளவரசி
இனிப்பு அதிகமாக சாப்பிடக் கூடாது என்று நினைத்தாலும் அந்தப் பழக்கத்தை விடுவது கடினமாக இருக்கும். இதனை எவ்வாறு எளிதாக மாற்றுவது என மருத்துவர் இளவரசி சில டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளார்.
இனிப்பு அதிகமாக சாப்பிடக் கூடாது என்று நினைத்தாலும் அந்தப் பழக்கத்தை விடுவது கடினமாக இருக்கும். இதனை எவ்வாறு எளிதாக மாற்றுவது என மருத்துவர் இளவரசி சில டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளார்.
மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை உடலுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக் கூடியது என்று எல்லோருக்கும் தெரியும். அதே வேளையில், அதிகமாக இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்வதும் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். இவை சர்க்கரை நோய் மட்டுமின்றி பல்வேறு உடல் நலக் குறைவை ஏற்படுத்தக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நமக்கு எதற்காக தோன்றுகிறது என மருத்துவர் இளவரசி விளக்கம் அளிக்கிறார். அந்த வகையில், இது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார். சிலருக்கு மூளைக்கான எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் போது, அவர்களிடம் சில உணவுகளை காண்பித்து அவற்றில் எந்த உணவுகளை உடனடியாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் பலரும் இனிப்பு வகைகளை உடனடியாக சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளனர். மற்றொரு புறம், இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருந்தவர்களுக்கு, அவற்றை உடனடியாக சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால், நம் உடல் இனிப்பு பொருட்களை தேடும் என்று தெரிய வருகிறது.
காலை எழுந்ததும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளை பெரும்பாலும் சாப்பிடுவோம். இது போன்று எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை காலை நேரத்தில் எடுக்கும் போது, இவை இரத்தத்தில் விரைவாக சர்க்கரையாக மாறிவிடும். இதனைக் கட்டுப்படுத்த இன்சுலின் அளவும் வேகமாக உயரும். அப்போது, சர்க்கரையின் அளவு சட்டென குறைந்து விடுகிறது. இப்படி நடக்கும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்காது.
Advertisment
Advertisements
இதைத் தடுக்க காலை உணவிலேயே ஒரு நாளைக்கு தேவையான புரதச் சத்தில் ஏறத்தாழ 60 சதவீதம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம் என்று எடுத்துக் கொண்டால், சுமார் 60 கிலோ எடை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 60 கிராம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் மீண்டும், மீண்டும் பசி எடுக்கும் உணர்வு ஏற்படாது.
சுண்டல், பன்னீர், முட்டை போன்றவற்றை நம் காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், மதியம் மற்றும் இரவு உணவுகளில் மீதமிருக்கும் 40 சதவீத புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, காலையில் சாப்பிடும் உணவில் கட்டாயமாக இனிப்பு இருக்கக் கூடாது. இது தவிர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வதில் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.
இது போன்ற உணவு முறையை பின்பற்றும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும் எனவும், அடிக்கடி இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் குறையும் என்றும் மருத்துவர் இளவரசி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Ask Dr Ela Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.