நாம் சாப்பிடும் உணவில் அறுசுவைகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். குறிப்பாக, தினசரி நாம் சாப்பிடும் உணவில் கசப்பு சுவை இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, கடந்த ஒரு வாரத்தில் நாம் எத்தனை முறை கசப்பு சுவை உடைய உணவை சாப்பிட்டிருப்போம் எனக் கேட்டால், பலரிடமும் பதில் இருக்காது. எந்த உணவுகளில் கசப்பு சுவை அதிகமாக இருக்கிறதோ, அவற்றில் தான் மருத்துவ குணம் நிறைந்திருப்பதாக சிவராமன் கூறுகிறார்.
அதற்காக, வேப்பிலையை பறித்து சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. பாகற்காய், வெந்தயம், கறிவேப்பிலை போன்ற உணவுகளில் கசப்பு சுவை காணப்படுகிறது. இவற்றை நாம் சாப்பிடலாம். ஆனால், அவற்றை சரியான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும். பாகற்காயில் வெல்லம், வெங்காயம் போன்ற பொருள்களை சேர்த்து நன்றாக வதக்கி சாப்பிட்டால், அதில் இருக்கும் சத்துகள் நம் உடலுக்கு கிடைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், துவர்ப்பு சுவையும் நம் உடலுக்கு மிக முக்கியம் என்று சிவராமன் கூறியுள்ளார். வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற உணவுகளில் இருந்து எளிதாக துவர்ப்பு சுவை கிடைத்து விடும். அதன்படி, கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த காய்கறிகளில் தான் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன.
இதற்காக வெந்தயப் பொடியை சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இதேபோல், கறிவேப்பிலையை சட்னியாக அரைத்து சாப்பிடலாம் என்றும் அவர் கூறுகிறார். அதே நேரத்தில், உப்பை நம் உணவில் குறைத்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கிராம் வரை மட்டுமே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பை தவிர்த்து, உப்பை குறைத்து, காரம், புளிப்பை ஓரளவிற்கு எடுத்து, கசப்பு மற்றும் துவர்ப்பை கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.