ginger chutney recipe in tami: நம்முடைய அன்றாட சமையல்களில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இவற்றில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும், எ, பி, சி போன்ற வைட்டமின்களும் நிரம்பி காணப்படுகின்றன.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வைக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள இஞ்சியில் எப்படி டேஸ்டியான, ஹெல்த்தியான சட்னி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
இஞ்சி சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் – 4
நறுக்கிய இஞ்சி துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் – 4
உப்பு – தேவையான அளவு
பொடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன்
தாளிக்க…
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி சட்னி சிம்பிள் செய்முறை:
முதலில் இஞ்சியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர், 4 பூண்டு பற்களை தோலுரித்து நறுக்கி சேர்த்து வைக்கவும்.
தொடர்ந்து மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். பின்னர் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். தொடர்ந்து வர மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
நன்கு வறுத்த இந்த பொருட்களை தனியே எடுத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று அளவு நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதக்கிய பின்பு, அதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். அவற்றை முன்னர் மிக்சியில் அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும். அதனுடன் சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கெட்டியாக அரைத்த பிறகு, அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து அரைக்கவும். இவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
தொடர்ந்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு, தாளிப்பை தயார் செய்து பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்க்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான, சத்தான மற்றும் ஆரோக்கியமான இஞ்சி சட்னி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.