Mappillai samba Sambar sadam recipe in tamil: பாரம்பரியமிக்க அரிசி வகைகளில் மாப்பிள்ளை சம்பாவும் ஒன்றாகும். முந்தைய காலங்களில் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடும் போது மாப்பிள்ளையின் பலத்தை சோதிக்க இளவட்ட கல்லை தூக்க செய்து பின் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். அத்தகைய இளவட்ட கல்லை தூக்க கூடிய பலத்தை இந்த ‘சம்பா அரிசி’ கொடுப்பதால் இவற்றுக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று பெயரிட்டுள்ளனர்.
மாப்பிள்ளை சம்பா அற்புத பயன்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசியின் நீராகாரத்தை குடித்தாலே உடலுக்கு நல்ல பலம் கிடைத்துவிடும். இந்த அற்புத சம்பா அரிசியில் புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்களும் இவற்றில் நிரம்பியுள்ளது. மேலும், இவை நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.

இவை தவிர, மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்தும் காணப்படுகிறது. இவற்றை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இவற்றின் மற்றொரு சிறப்பு ஆண்மையை பலப்படுத்தும் என்பது தான். இந்த மாப்பிள்ளை சம்பாவை ஒரு மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அதற்கான பலன் நிச்சயம் தெரிய ஆரம்பிக்கும்.
இப்படி ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியுள்ள இந்த மாப்பிள்ளை சம்பாவில் எப்படி சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
மாப்பிள்ளை சம்பாவில் சாம்பார் சாதம் – தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி – 2 கப்
காய்கறிகள் -400 கிராம்,
துவரம்பருப்பு -150 கிராம்,
மஞ்சள் தூள் -2 சிட்டிகை,
கடுகு, சீரகம், மிளகு,
வெந்தயம் -அரை தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -3,
தக்காளி -2,
சின்ன வெங்காயம் -100 கிராம்,
பூண்டு -20 பல்,
சாம்பார்பொடி -3 மேசைக்கரண்டி,
புளி, -ஒரு எலுமிச்சை அளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை -சிறிதளவு,
கொத்துமல்லி- சிறிது.
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் சிம்பிள் செய்முறை
முதலில் காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு குக்கரில் மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
இதன்பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
தொடர்ந்து வேக வைத்த துவரம் பருப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழைய வேக வைக்கவும்.
இதன்பிறகு, தனியாக ஒரு பாத்திரம் எடுத்து, அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
நாம் சேர்த்த காய்கறிகள் சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பின்னர் அவற்றுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துகொள்ள்ளவும்.
இப்போது வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தொடர்ந்து இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சாதத்துடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால் சுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் தயாராக இருக்கும்.
இப்போது அவற்றை சூடாக உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் பரிமாறி ருசித்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“