பெரும்பாலானோர் காலை உணவாக, இட்லி, தோசையையே சாப்பிடுவர். ஆனால், தினமும் அதே சட்னி, சாம்பார் என்பது அவர்களுக்கு சலிப்பை தரலாம். சிலர் சாதாரண இட்லி பொடியையும் எடுத்துக் கொள்வர். ஆனால், சாதாரண இட்லி பொடியை விட சத்தான, சுவையான முருங்கைக் கீரை இட்லிப் பொடி பற்றி தெரிந்தால் நீங்கள் இதை தினமும் காலை உணவின்போது தவற விடமாட்டீர்கள்.
முருங்கையில் அனைத்துப் பொருட்களுமே, உண்ணத் தகுந்தவை மற்றும் சத்தானவை. ஆனால் நமக்கு தினமும் முருங்கை கீரை கிடைப்பது சற்று கடினம் தான். முருங்கையின் பலன்களை தினமும் கிடைக்க செய்ய இந்த முருங்கைக் கீரை பொடியை முயற்சிக்கலாம்.
முருங்கையில், நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘ஏ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு போன்றவை உள்ளன.
முருங்கைக் கீரை மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. உடல் வலியை குறைப்பதோடு, மலட்டுத் தன்மையை நீக்குகிறது. ரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்து, ரத்த சோகையை போக்குகிறது. தாய்ப்பால் சுரப்புக்கு உதவுவதோடு, தோல் வியாதிகள் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைக்களுக்கும் தீர்வளிக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக் கீரையை நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யும் இந்த முருங்கைக் கீரை இட்லி பொடி எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை – 2 கப்
உளுந்து – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகு – 5 ஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முருங்கைக் கீரையை 3 முறை நன்றாக கழுவி, தண்ணீரை நன்றாக வடித்தபின் ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, நிழலில் வைத்து 3 நாட்களுக்கு காய வைக்க வேண்டும்.
3 காய வைத்த பிறகு, முறுவலான நிலையில் இருக்கும் முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடேறிய பின் உளுந்தை அதில் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அதன் பின் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
பின்னர் அதே கடாயில் கடலைப் பருப்பை சேர்த்து, அதனையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
இதேபோல் சீரகத்தையும் வறுத்து, ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மிளகையும் வறுத்து ஆற வைக்க வேண்டும். உப்பு மற்றும் பொடி செய்த பெருங்காயத்தையும் வறுக்க வேண்டும்.
எல்லாம் நன்றாக ஆறிய பின், ஒரு மிக்ஸியில் போட்டு, அதனுடன் காயவைத்த முருங்கைக் கீரையும் சேர்த்து, இட்லி பொடி பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதன் சூடு போகும் வரை ஆற வைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளலாம்.
அருமையான, சத்தான முருங்கைக் கீரை இட்லிப் பொடி ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.