Poondu rasam recipe: நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இந்திய மசாலாப் பொருட்களிலிருந்து ஒரு சிம்பிளான ரசம் செய்முறையை இங்கு பார்க்க உள்ளோம். இந்த அற்புதமான ரசம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும், ஜலதோஷம், இருமல், சளி உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
இந்த ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களான கருப்பு மிளகு, பெருங்காயம், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை நோய்களை அடித்து விரட்டுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சுவைமிகுந்த ரசம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு அள்ளித்தரும்.

பூண்டு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:
புளி கரைசல் – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – 10-12
கருப்பு மிளகு – 1-2 தேக்கரண்டி
பூண்டு – 4-5 பற்கள்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உலர் சிவப்பு மிளகாய் – 2
உப்பு – சுவைக்கு
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (புதிதாக நறுக்கியது)
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி

சுவைமிகுந்த பூண்டு ரசம் சிம்பிள் செய்முறை:
பூண்டு ரசம் தயார் செய்ய முதலில் 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்சியில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பிறகு, ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெயை விட்டு சூடாக்கி, நறுக்கிய தக்காளி, மீதமுள்ள கறிவேப்பிலை, பெருங்காய தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் முன்பு அரைத்து தனியாக வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும். தொடர்ந்து அவற்றோடு புளி கரைசல் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு மூடியால் மூடி, குறைந்தது 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் (அல்லது நெய்) சேர்க்கவும். எண்ணெய் சூடான பிறகு, கடுகு, 1 சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து விதைகள் வெடிக்கத் தொடங்கும் வரை பதப்படுத்தவும்.
பின்னர் கடாயில் உள்ள மசாலாவை சேர்க்கவும். தீயை அணைத்து, புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சிறிது கருப்பு மிளகு தூள் தெளித்து கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவைமிகுந்த ரசம் தயாராக இருக்கும். இவற்றை நீங்கள் சாதாரணமாகவும், சாதத்தோடும் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“