rajma recipe tamil: ரெட் கிட்னி பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
ராஜ்மாவில் சோடியம் மற்றும் பொட்டாசியம் இல்லை. ஆனால், புரதம் நிரம்பி காணப்படுகிறது. மேலும், புரதத்தில் உள்ள எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இவற்றில் உள்ளது.
உடலில் ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக, மலச்சிக்கலைத் தடுப்பதிலும், கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
வயதான பிறகு வரும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும் நிலையைத் தடுக்க அடிக்கடி இவற்றை உபயோகிக்கலாம். நீரிழிவு மற்றும் இதயநோய் உள்ளவர்களும் இவற்றை அடிக்கடி உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த அற்புத உணவை பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக அரிந்த எலுமிச்சைப் பழத்தை மேலே பிழிந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எலுமிச்சை இதிலுள்ள இரும்புச்சத்து உறிஞ்சப்பட உதவும். இவற்றில் தயார் செய்யப்படும் கிரேவியை சாதத்துடன் சேர்த்தும் ருசிக்கலாம்.
ராஜ்மா சுண்டல் செய்யத் தேவையான பொருட்கள்
சிவப்பு ராஜ்மா - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
தாளிக்க…
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
ராஜ்மா சுண்டல் சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு கப் ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும்.
இதன்பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து, மிக்சியில் இட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.
தொடர்ந்து அவற்றுடன் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் சத்தான ராஜ்மா சுண்டல் தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.