Tamil health tips: நீர்ச்சத்து நிரம்பி காணப்படும் காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் இவை அதிகமாக சாகுபடி செய்யபட்டாலும், இதன் பூர்விகம் தென்னாப்ரிக்கா தான் என்று நம்பப்படுகிறது. இந்த அற்புதமான காய்கறியில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன.
இவை உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகம் கொடுக்கும் எனவும், மற்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், இவை உடல்சூட்டை தணிக்க வல்லதாகவும், சிறுநீரகம், நாவறட்சி, கண்நோய்கள், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள சுரைக்காயின் 7 முக்கிய நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
மன அழுத்தம்
சுரைக்காய் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைகிறது. இவை நீர்சத்து மிகுந்த காய்கறி என்பதால் உடல் வெப்பநிலை கணிசமாக குறைகிறது. இது மயக்க மருந்து குணங்களையும் கொண்டுள்ளது.
இதயத்திற்கு நன்மை பயக்கும்
சுரைக்காய் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வாரம் மூன்று தினங்களுக்கு சுரைக்காய் சாரை குடிப்பது ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும். மேலும், இரத்த அழுத்தமும் சீராகும்.
உடல் எடை குறைப்பு
அதிக எடை, உடல் பருமனைக் கொண்டோர், சுரைக்காய் ஜூஸ் குடிப்பது பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் உள்ளன.
தூக்கமின்மை
போதுமான அளவுக்குத் தூங்க இயலாமையே தூக்கமின்மைக் கோளாறு என அழைக்கப்படுகிறது. சுரைக்காய் ஜூஸுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து குடித்தால் நீங்கள் நன்றாக தூங்குவீர்கள்.
தலைமுடி நரைப்பதை தடுக்கிறது
உலகம் முழுவதும் ஏற்பட்ட வாழ்வில் மாற்றங்களாலும், காற்று மாசுபாடு காரணமாகவும் இளம் வயதிலேயே முடி நரைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் முடியின் நிறத்தையும், அமைப்பையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

செரிமானத்திற்கு உதவுகிறது
சுரைக்காயில் உள்ள நார்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டும் தான் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க சுரைக்காய் கூட்டு கொடுப்பதுண்டு. மேலும், சருமங்களை பராமரிக்கவும் இவை உதவுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“