இந்த புத்தாண்டு முதல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என உறுதியேற்றவரா நீங்கள்? அப்படியென்றால் பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இவை நம் உடலின் எளிதான இயக்கவியலுக்கு எந்த அளவிற்கு உதவி செய்கிறது என தற்போது பார்க்கலாம்.
பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் என்றால் என்ன?
புரோபிரியோசெப்டிவ் நியூரோமஸ்குலர் ஃபஸிலிட்டேஷன் (proprioceptive neuromuscular facilitation) என்பதை சுருக்கமாக பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் என அழைக்கின்றனர். 1940களில் அமெரிக்காவில் இருந்த நரம்பியல் மருத்துவர் ஹெர்மன் கபட் மற்றும் உடல் சிகிச்சை நிபுணர்களான மார்கரெட் நாட், டோரதி வோஸ் ஆகியோரால் இந்த பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் நரம்பியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்கள் தசைகளை எளிதாக இயக்குவதற்கு இவை பயன்பட்டன.
1970களில் மருத்துவமனைகளை கடந்து விளையாட்டு அரங்கிற்குள் இந்த பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் கால் பதித்தது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்கள் பயிற்சிகளின் போது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த இதனை பயன்படுத்தினர். கான்ட்ரக்ட் - ரிலாக்ஸ் மற்றும் கான்ட்ரக்ட் - ரிலாக்ஸ் - அகோனிஸ்ட் - கான்ட்ரக்ட் என இதில் இரண்டு வகைகள் இதில் பின்பற்றப்படுகின்றன.
அறிவியல் பூர்வமான தரவுகள்:
பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் முறையில் நமது நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, உடல்நலக் குறைவு காரணமாக இயக்கவியல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சி அல்லது விளையாட்டு போட்டிகளின் போது பி.என்.எஃப் ஸ்ட்ரெச்சிங் மேற்கொள்வது காயம் ஏற்படுவதை தடுப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உடற்பயிற்சிகளுக்கு பின்னர் இதனை மேற்கொள்வது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
எந்த அளவிற்கு பி.என்.எஃப் ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும்?
ஒரு வாரத்திற்கு இரண்டு முறை பி.என்.எஃப் ஸ்ட்ரெச்சிங் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அதிகப்படியான அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 20 சதவீத அழுத்தம் கொடுத்தாலே போதுமானதாக இருக்கும். மேலும், 3 விநாடிகள் இந்த ஸ்ட்ரெச்ச்சிங் பொசிஷனை வைத்திருக்க வேண்டும்.
மற்றொரு நபரின் உதவியுடன் இந்த பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங்கை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான வேகம் மற்றும் பலத்தை கொண்டு ஒரு வேலையை நீங்கள் செய்ய வேண்டி இருந்தால், பி.என்.எஃப் ஸ்ட்ரெட்ச்சிங் உங்கள் பணியை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.