மண் சார்ந்த வரலாற்றையும், சமூக நெறிகளையும் பேச்சிலும் எழுத்திலும் வடிப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் படைப்பாளி, எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன். இலக்கியங்கள் சமூகத்திற்கு ஆற்றிய, ஆற்றுகிற பங்கு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக இங்கே பேசுகிறார்...
இலக்கியங்கள் சமூக மாற்றத்துக்கு பெரிய பங்களிப்பை தரவில்லை என்கிற மாதிரி விவாதங்கள் இருக்கின்றன. உண்மை என்னன்னா, சமூக மாற்றத்துக்கு இலக்கியம் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கு.
உதாரணத்திற்கு, ரஷ்ய இலக்கியத்தில் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் இருக்கு. ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளியின் போராட்ட உணர்வைப் பார்த்து, அவனது தாய் எப்படி போராட்ட உணர்வு பெறுகிறார் என்பதை விவரிக்கிற நாவல்தான் அது. ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட காரணிகளுள் ‘தாய்’க்கும் ஒரு பங்கு உண்டு.
உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலும்கூட. ஆக, ஒரு படைப்பு எத்தகைய தாக்கத்தையும் உருவாக்க முடியும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
ஏன், அவ்வளவு தூரம் போக வேண்டும்? கோவில்பட்டியில் காளாம்பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி என்கிற விவசாயி, அந்தக் காலத்தில் இன்டர்மீடியட் படிச்சவர். நியூ ஏஜ் என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் சந்தா செலுத்தி வாங்கி, சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வாசிச்சுக் காட்டுவார்.
கிராமத்துல கதவை தூக்கிட்டு போயிட்டான்னா, நீங்க அசிங்கப்பட்டு நிக்கிறீங்கன்னு அர்த்தம். உங்களை அவமானப்படுத்துவதற்கான நடவடிக்கை அது.
இது நடந்தது 1966-67 காலகட்டம். அப்போ கடுமையான வறட்சி. மக்களால் வீட்டுத் தீர்வைகூட கட்ட முடியவில்லை. ரெங்கசாமி வீட்டை பஞ்சாயத்து போர்டு காரங்க போலீஸ் மூலமா ஜப்தி பண்ணிட்டாங்க. அவரது ஒரு ஜோடி காளை மாட்டை அவுத்துட்டு போயிட்டாங்க. வீட்டுல வேற எதுவும் இல்லை. அதனால, தேக்கு மரத்துல செஞ்ச வீட்டுக் கதவையும் தூக்கிட்டுப் போனாங்க.
மூன்றாம் பாகம்: கவிதைப் போட்டியில் பாரதியாரும் தோற்ற கதை: இரா.நாறும்பூ நாதன்
கிராமத்துல கதவை தூக்கிட்டு போயிட்டான்னா, நீங்க அசிங்கப்பட்டு நிக்கிறீங்கன்னு அர்த்தம். உங்களை அவமானப்படுத்துவதற்கான நடவடிக்கை அது. ஆனா, இது விவசாயிகள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியது.
அந்தக் காளை மாடுகளை எந்தச் சந்தையில் கொண்டு போலீஸ் விற்க நினைச்சாலும், ‘இது ரெங்கசாமி வீட்டுல ஜப்தி பண்ணின காளை மாடு. ஒருத்தரும் வாங்காதீங்க’ன்னு விவசாயிகளே சொன்னதால், யாரும் வாங்கல. கழுகுமலை மாட்டுத்தாவணி, கடம்பூர் மாட்டுத்தாவணி, கயத்தாறு என பல இடங்களில் விற்க முயற்சித்தும், முடியவில்லை. கடைசியில் ரெங்கசாமியின் வீட்டுலயே கொண்டு வந்து கட்டிப் போட்டாங்க.
அதையொட்டி 67-ல் தேர்தல் வருது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அழகர்சாமி முதல்முறையா அங்க தேர்தல்ல நிற்கிறாரு. அவரும் ஒரு விவசாயி. காங்கிரஸ் கட்சி அதுக்கு முன்னால வரை ஆட்சியில் இருந்தது. அந்தத் தேர்தல்ல, ‘காளை மாட்டை ஜப்தி பண்ணிட்டு, காளை மாட்டுக்கு ஓட்டு கேட்கான்’ன்னு பெரிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் நடந்தது.
அதே காலகட்டத்துல, இந்த சம்பவத்தை வச்சு ‘கதவு’ன்னு ஒரு கதையை கி.ராஜநாராயணன் எழுதுறாரு. கி.ரா-வின் பிரபலமான சிறுகதை அது. அந்தக் கதையில் ரெங்கசாமியை சேர்க்காம, வேற மாதிரி எழுதியிருப்பாரு.
குழந்தைங்க ஒரு வீட்டுல கதவை பஸ் மாதிரி வச்சு விளையாடிக்கிட்டிருப்பாங்க. அந்த வீட்டுக்கும் தீர்வை கட்டியிருக்க மாட்டாங்க. பஞ்சாயத்து போர்ட்ல இருந்து வந்து, கதவை தூக்கிட்டுப் போயிருவாங்க.
அந்த வீட்டுக்காரர், மணிமுத்தாறு பக்கம் எஸ்டேட் வேலைக்கு போயிருப்பார். காட்டு வேலைக்கு போயிருந்த வீட்டம்மா வந்து பார்த்தா, கதவு இருக்காது. வீட்டுல இல்லாத நேரத்துல இப்படி கதவை தூக்கிட்டுப் போயிட்டாங்களேன்னு அந்த அம்மா அழுது புலம்புவாங்க. அப்புறம் கதவு இல்லாததால, குளிர் காத்து அடிச்சு, அந்த வீட்டுல இருந்த கைக்குழந்தை இறந்துடும்.
பிரபலமான இந்தச் சிறுகதை வெளியான பிறகுதான் தேர்தல் வருது. தேர்தல்ல காங்கிரஸ் தோற்றுப் போகுது. அழகர்சாமி ஜெயிக்கிறாரு.
சரி, அந்தக் கதவை தூக்கிட்டுப் போனவங்க என்ன பண்ணினாங்கன்னு பாத்தா, பஞ்சாயத்து போர்டு சுவரில் சாய்ச்சு வச்சுருப்பாங்க. பள்ளிக்கூடம் போகிற இந்த வீட்டுக் குழந்தைகள் இருவர் அத பார்த்துட்டு வந்து அவங்க அக்காவை அழைச்சுட்டு போய் கதவைக் காட்டுவாங்க. அந்தக் கதவு, சீண்டுவாரில்லாம கரையான் அரித்துப் போயிருக்கும். இதில் சொல்ல வர்றது என்னன்னா, ஜப்தி பண்ணின அந்தக் கதவு மூலமாக யாருக்கும் பிரயோஜனம் கிடையாது. அந்தக் கதவை விற்று, அந்த வீட்டுக்காரர் செலுத்த வேண்டிய பணத்திற்கு வரவு வைக்கவும் இல்லை. ஆனால் அந்த கதவை ஜப்தி செய்து, விவசாயிக்கு மேலும் துன்பத்தைக் கொடுத்திருக்காங்க.
பிரபலமான இந்தச் சிறுகதை வெளியான பிறகுதான் தேர்தல் வருது. தேர்தல்ல காங்கிரஸ் தோற்றுப் போகுது. அழகர்சாமி ஜெயிக்கிறாரு. இந்த மாற்றத்துக்கு ‘கதவு’ கதைதான் காரணம்னு நான் சொல்லல. ஆனா, இந்தக் கதையும் ஒரு பிரதான காரணம்.
சமூகச் சூழலை கி.ரா.வால், கதையில் கொண்டுவர முடிந்தது. அதனால், அந்தப் படைப்பும் வெற்றி பெற்றது. இன்றைக்கும் ராஜநாராயண்ணா, ‘வேட்டி’, ‘கதவு’ கதைகளை தவிர்க்க முடியாது.
எதுக்கு சொல்றேன்னா, ஒரு படைப்பால் சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். அதுக்காக எல்லாக் கதைகளும் மாற்றத்தை உருவாக்கி விடாது. சில கதைகள் சமூகச் சூழலை மட்டும் சொல்லும். சில கதைகள் தீர்வு சொல்லும். சில கதைகள் ஒண்ணுமே சொல்லாமலும் இருக்கும்.
எல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு படைப்பும், அதன் இயல்பில் இருக்கும். பூமணியின் கதைகள், கி.ரா.வின் கதைகள், வண்ணதாசன் கதைகள், வண்ண நிலவன் கதைகள், தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி... இவங்க கதைகள் எல்லாம் சமூக நோக்கில் ஆழமாக எழுதப்பட்டவை. அப்படியான கதைகள் இன்னைக்கு சமூகத்திற்கு தேவை.
அன்றாடம் நடக்கிற நிகழ்வாக இருந்தாலும்கூட, நாம பாக்கிறதுக்கும் படைப்பாளி பாக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. சில நிகழ்வுகளை படைப்புல பொருத்திச் சொல்லும்போது, மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான கருத்துகளை கொண்டு செல்ல முடியும். இந்த வகையில் சமூக மாற்றத்திற்கு இலக்கியங்கள் பங்களிக்க முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை மட்டுமல்ல, நான் சார்ந்திருக்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் நிலைப்பாடு.
(பேசுவோம்) சந்திப்பு: ச.செல்வராஜ்
(எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன் பிறந்த ஊர், கழுகுமலை. பள்ளிப் படிப்பு, கோவில்பட்டியில்! இவரது தந்தை இராமகிருஷ்ணன், தமிழாசிரியர். இயல்பாக சிறு வயதிலேயே வாசிப்பு ஆர்வம் இவரைத் தொற்றிக்கொள்ள அது ஒரு காரணம்.
‘கனவில் உதிர்ந்த பூ’, ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ ஆகிய இவரது சிறுகதை தொகுப்புகள் பெரும் கவனம் பெற்றவை. ‘கண் முன்னே விரியும் கடல்’ இவரது முக்கியமான இன்னொரு தொகுப்பு நூலாகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். தொடர்புக்கு: narumpu@gmail.com )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.