வரலாறு முக்கியம்: இரா.நாறும்பூ நாதன்

உதயசங்கரின் ‘டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்’: லயிச்சு வாசிக்கும்போது, திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில கால் மேல் கால் போட்டு வாசிச்ச பழைய பால்ய நினைவுகள் வரும்....

‘ஒரு படைப்பால் சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்காக எல்லாக் கதைகளும் மாற்றத்தை உருவாக்கி விடாது. சில கதைகள் சமூகச் சூழலை மட்டும் சொல்லும். சில கதைகள் தீர்வு சொல்லும். சில கதைகள் ஒன்றுமே சொல்லாமலும் இருக்கும்.

எல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு படைப்பும், அதன் இயல்பில் இருக்கும்.’ என்கிறார், எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக அவரது உரையாடல் (பாகம் 2) தொடர்கிறது…

எழுத்தாளர் சு.வெங்கடேசன், ‘காவல் கோட்டம்’ நாவல் எழுதியிருக்காரு. மதுரையை ஆண்ட சமூகம் ஒண்ணு இருக்கு. மதுரையை காவல் காத்த சமூகம் ஒண்ணு இருக்கு.

ஒரு சமூகம், மதுரையை காவல் காக்கும் உரிமையை நாயக்கர் ஆட்சி காலத்தில் கேட்டு வாங்கியிருக்காங்க. பிற்காலத்தில் வெள்ளைக்காரர்கள் வந்து இவர்களை குற்றப்பரம்பரை என அறிவிச்சு, ‘இவங்க நல்லவங்க கிடையாது. இவங்களுக்கு படிப்பறிவு கிடையாது. திருடுவாங்க’ன்னு சொன்னாங்க.

ஆனா, அவங்களுக்கு அப்படியான சூழ்நிலை ஏன் வந்தது? என்பதை ‘காவல் கோட்டம்’ நாவலில் எழுதியிருப்பாரு சு.வெங்கடேசன். பொதுவாக இருட்டு என்பது நம்மைப் பொறுத்தவரை, இரவு. ராத்திரி ஆனா, எல்லாரும் தூங்குவாங்க. அதைத் தவிர, இரவுக்கு ஒண்ணும் கிடையாது. ஆனா இருட்டு எப்படி ஒரு சமூகத்திற்கு பயன்பட்டிருக்குன்னு காவல் கோட்டம் நாவலில் கணிசமான பகுதியில் சு.வெங்கடேசன் சொல்லியிருப்பாரு.

வெள்ளைக்காரர் காலத்துல இந்த சமூகத்தை சேர்ந்த அத்தனை ஆண்களும் இரவில் ஊர்ப் பொது இடமான கச்சேரிக்கு போயிடணும். போலீஸார் வந்து தினமும் ராத்திரி பத்து மணிக்கு, ‘ஒண்ணு, ரெண்டு, மூணு…’ன்னு வரிசையா எண்ணுவாங்க.

இருட்டுல எந்த நேரத்துல திருடப் போணும்? களவு செய்யக்கூடிய நேரம் எது? இரவில் புறப்படுகிற நேரத்தின் சகுனங்கள் எவை? இருட்டுலயும் எந்த இருட்டு? முன்னிருட்டா, பின்னிருட்டா? எந்த நேரத்துல அசந்து தூங்குவாங்க, அந்த நேரத்துல கொள்ளை அடிக்கப் போறது பத்தி நீண்ட பக்கங்களில் எழுதியிருப்பாரு.

வெள்ளைக்காரர் காலத்துல இந்த சமூகத்தை சேர்ந்த அத்தனை ஆண்களும் இரவில் ஊர்ப் பொது இடமான கச்சேரிக்கு போயிடணும். போலீஸார் வந்து தினமும் ராத்திரி பத்து மணிக்கு, ‘ஒண்ணு, ரெண்டு, மூணு…’ன்னு வரிசையா எண்ணுவாங்க. ஒரு கிராமத்துல 113 ஆண்கள் இருக்காங்கன்னா, அத்தனை பேரும் ஆஜராகணும்.

ஒருத்தன் நல்லவனோ, கெட்டவனோ, படிச்சவனோ, படிக்காதவனோ, குற்றப் பரம்பரையை சேர்ந்த அனைவரும் வந்து அங்க படுத்துக் கிடக்கணும். 113 பேருல ஒருவன் வரலைன்னா, ‘எங்கய்யா அவன, திருடப் போயிட்டானா?’ன்னு சொல்லி, அவனை பிடிச்சு இழுத்துட்டு வந்து இரும்பை பழுக்க காய்ச்சு முதுகுல, தொடையில சூடு போடுவாங்க.

திருடப் போனாலுமே, குற்றவியல் நடைமுறைன்னு ஒண்ணு இருக்குல்ல. அப்படித்தான தண்டனை கொடுக்க முடியும்? எல்லா சமூகத்தினருக்கும் அதுதான். அதுக்குன்னு சட்டங்கள், நீதித்துறை இருக்கு. ஆனா இவர்கள் மட்டும் காணாமல் போனா, திருடப் போனதா இவங்களே முடிவு செய்து நாலு போலீஸ் காரங்களை அனுப்பி கயிற்றால கட்டி இழுத்து வந்து சூடு போடுவாங்க.

R Narumpu Nathan Essays, காவல் கோட்டம் நாவல், Writer S Venkatesan, Kavalkottam

Writer R Narumpu Nathan: எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன்

இப்படியான பழக்கங்களை வெள்ளைக்காரர் காலத்துல ஏற்படுத்தினாங்க. நாம சுதந்திரம் அடைந்த பிறகுதான் அந்தப் பழக்கம் நீக்கப்பட்டது. இப்படியான வரலாறுகளை நம்ம சமூகத்திற்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ‘வரலாறு முக்கியம்’ என்கிற பதம் வடிவேலு மூலமாக நகைச்சுவையாக பார்க்கப்பட்டாலும், அது நிஜம்.

மேலும் படிக்க: எதையும் செய்யும் எழுத்து பாகம் 1- கி.ராஜநாராயணன் எழுதிய ‘கதவு’ சிறுகதை, ஒரு தேர்தலில் உருவாக்கிய தாக்கம்

அதே போல ‘வேள்பாரி’ன்னு ஒரு நாவல் சு.வெங்கடேசன் எழுதியிருக்காரு. அதுலயும் பாரின்னா, சேர- சோழ- பாண்டிய மன்னர்களைத் தாண்டி, ஒரு சிற்றரசனாக இருந்தாலும், தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கிய அரசனாக எப்படி இருந்தான்? என்பதை சொல்லியிருக்கிறார். இது ஒருவகை படைப்பு.

மூன்றாம் பாகம்- கவிதைப் போட்டியில் பாரதியாரும் தோற்ற கதை: இரா.நாறும்பூ நாதன்

அந்தக் கால சமூகம், எப்படியான சமூகமாக இருந்தது? என்பதை பல்வேறு படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், ஏராளமான படைப்புகளை தந்திருக்கிறார்.

எல்லாமே அரசியல் மாற்றத்திற்கான கதைகளாக இருக்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, ‘டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல்’ என்கிற கதையை உதயசங்கர் எழுதியிருக்கிறார். ரொம்ப சாதாரண சிறுகதைதான்…

ஒரு பையன் வீட்டுப் பரணை சுத்தப் படுத்தும்போது, ஒரு புல்லாங்குழலைப் பார்க்கிறான். நம்ம வீட்டுல ஏது புல்லாங்குழல் என அம்மாவிடம் கேட்பான். ‘இது அப்பாவின் புல்லாங்குழல். நல்லா வாசிப்பாருடா’ என அம்மா சொன்னதும், அவனுக்கு ஆச்சர்யம்!

ஏன்னா அப்பாவை அவன், ஒரு அலுவலக குமாஸ்தாவாகத்தான் பார்க்கிறான். உடனே அப்பாவிடம் எடுத்துச் சென்று, ‘அப்பா, நீ நல்லா புல்லாங்குழல் வாசிப்பியாமே? எனக்கும் கத்துக்க ஆசையா இருக்கு’ என்கிறான். அவர் புல்லாங்குழலை வாங்கி பார்ப்பாரு. ஆசையா இருக்கும். துடைச்சுட்டு, ஊதிப் பார்ப்பாரு. முதல்ல காத்து மட்டும்தான் வரும். ஆனாலும் கொஞ்ச நேரத்துல பழைய லயத்தை பிடிச்சுடுவாரு.

அப்படியே நீரில் மீன்கள் துள்ளிக் குதிக்கிற மாதிரியும், பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் ஆனந்த கூத்தாடுகிற மாதிரியும் தன்னை மறந்து வாசிப்பார். டக்குன்னு பிசிறு தட்டி, திடீர்னு நிஜ உலகம் வந்துரும்.

அப்படி லயிச்சு வாசிக்கும்போது, திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில கால் மேல் கால் போட்டு வாசிச்ச பழைய பால்ய நினைவுகள் வரும். இப்ப அவர் இருக்கிறது, கோவில்பட்டி மாதிரி ஒரு கரிசல் பூமியில. கல்யாணம் கட்டி, நாலைந்து பிள்ளைங்க. பிள்ளைங்களுக்கு கல்யாணம், பொழைப்புக்கு அரசு வேலை என வந்துவிட்டவர், தன்னை மறந்து வாசிச்சுட்டு இருந்தார்.

அப்படியே நீரில் மீன்கள் துள்ளிக் குதிக்கிற மாதிரியும், பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் ஆனந்த கூத்தாடுகிற மாதிரியும் தன்னை மறந்து வாசிப்பார். டக்குன்னு பிசிறு தட்டி, திடீர்னு நிஜ உலகம் வந்துரும். அப்போ சொல்வாரு, ‘டேய் பொழைக்கிற வழியைப் பாரு. ஒழுங்கா பரீட்சைக்கு படி’ன்னு, அறிவுரை சொல்லிட்டுப் போயிடுவாரு.

அற்புதமான திறமையாளர்களை இந்த லெளகீக வாழ்க்கை எப்படி அமுக்குகிறது? எல்லாரும் லட்சியத்துடன் வாழ முடியவில்லை. குடும்பம், கல்யாணம் என வரும்போது லெளகீக வாழ்க்கையுடன் சமரசம் செய்துகொண்டு போகவேண்டிய துர்பாக்கிய நிலை சில கலைஞர்களுக்கு ஏற்படுகிறது.

இப்படி எல்லாத் தொழில்களிலும் பார்க்கலாம். நல்ல ஓவியனாக இருப்பான். நல்ல நடனம் ஆடக்கூடியவனாக இருப்பான். ஆனால் ஏதாவது அலுவலகத்திலே குமாஸ்தாவாக பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இதைத்தான் உதயசங்கர் தனது சிறுகதையில் சொல்லியிருக்கிறார்.

(பேசுவோம்)  சந்திப்பு: ச.செல்வராஜ்

(எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். ‘கனவில் உதிர்ந்த பூ’, ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ ஆகிய இவரது சிறுகதை தொகுப்புகள் பெரும் கவனம் பெற்றவை. ‘கண் முன்னே விரியும் கடல்’ இவரது முக்கியமான இன்னொரு தொகுப்பு நூலாகும். தொடர்புக்கு: narumpu@gmail.com )

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Literature News by following us on Twitter and Facebook

×Close
×Close