அழகிய பெரியவன்
(3) சாதி பிரியாணி
வழக்கமாக பிரியாணி எனும் சிறப்பு உணவை ஆடு, மாடு, பன்றி, கோழி, இறால், மீன் ஆகியவற்றின் இறைச்சிகளைக் கொண்டும், முட்டை, காளான், காய்க்கிழங்குகள் ஆகியவற்றைக் கொண்டும் தான் சமைப்பார்கள். ஆனால் மத உணர்வுகளைக் கொண்டும், அவற்றில் உட்கிடையாக ஒளிந்திருக்கும் சாதியைக் கொண்டும் கூட அது சமைக்கப்படுகிறது என்பதை முதன் முறையாகக் கேட்டு நகைத்துக் கொண்டிருக்கிறது உலகம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே மாதம் 13 தொடங்கி மூன்று நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்தப் போவதாக மாவட்ட அரசு நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இருபது வகை பிரியாணிகள், முப்பது அரங்குகள் என மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் நடந்தன. விரும்பிய பிரியாணிகளையெல்லாம் உண்டு மகிழலாமென்று உணவுப் பிரியர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்! திருவிழா அரங்கு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் பல்வேறு ஊர்களில் இருப்பவர்களும் இந்த பிரியாணி திருவிழாவுக்கு பெருமளவில் வருகைத்தர தயாராகிக் கொண்டிருப்பதாக டிவிட்டரும், முகநூல் பக்கங்களும், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளும் சொல்லின.
இருபது வகையான பிரியாணிகள் கிடைக்கும் என்று பரப்புரை செய்யப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கும் பன்றிக்கறிக்கும் மட்டும் இடமளிக்கப் படவில்லை. இதை அறிந்ததும் தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. மாட்டுக்கறி விலக்கப்பட்டதை மட்டும் கண்டித்து சில இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் கைகோர்த்தன. மாட்டுக்கறி அரசியலுக்குப் பெயர்போன சில இந்துத்துவ அமைப்புகள் இந்தத் திருவிழாவை நிறுத்தச் சொல்லி கண்டன அறிக்கைகளை வெளியிட்டன. இவற்றின் உச்சமாக தமிழ்நாடு பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்த பாகுபாட்டுக்கு விளக்கம் கோரி தாக்கீது ஒன்றை அனுப்பியது.
முற்காலத்தில் ஆதிதிராவிடரின் தலைநகரமாக இருந்தது என்று கோபல் செட்டியாரால் எழுதப்பட்ட ஆம்பூர், நவாபுகள் காலத்தில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் நடந்த போரால் பேர்பெற்ற ஆம்பூர், மல்லிகைக்கும் வெற்றிலைக்கும் தோல்பொருட்களுக்கும் பாராட்டப்பட்ட ஆம்பூர், தற்போது பிரியாணிக்காக புகழடைந்திருக்கிறது. இந்தச் சர்ச்சையால் மிகவும் குறிப்பாக மாட்டுக்கறி பிரியாணிக்காக!
ஆம்பூரில் நிறைய இந்துக்கள் வாழ்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்தத் திருவிழாவில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். இந்தியாவில் பசுவை வைத்து செய்யப்படும், அரசியலுக்கும், கருத்துத் திணிப்புக்கும் பலநூறு ஆண்டுகால வரலாறு உண்டு. அந்த வரலாற்றை உயிர்ப்பிக்கும் விதமாகவும், புதுப்பிக்கும் விதமாகவும் வெளியாகியுள்ள ஆட்சியரின் கருத்துத் தொடர்ச்சியைத் தான் நாம் இப்போது ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
எல்லா வகையான பிரியாணிகளுக்கும் அனுமதியை வழங்கி, மத அரசியல் காரமின்றி இந்தத் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் சுவையுடன் நடத்தி முடித்திருக்கலாம்! மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் அந்த வளாகத்துக்குள் தடைசெய்ததன் மூலம் ஒரு வகையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிந்தோ தெரியாமலோ ‘புனிதப்பசு அரசியல்’ செய்கின்றவர்களுக்கான பிறிதொரு வாய்ப்பை தமிழ்நாட்டில் வழங்கியிருக்கிறார் என்று கருதவேண்டியிருக்கிறது. இனி தமிழகத்தில் பிரியாணி திருவிழா எங்கு நடத்தப்பட்டாலும் இதைப் போன்றதொரு கருத்து மோதல் எழலாம்.
நமது உணவுப் பழக்கம்
இந்துக்களுக்கும் மாட்டிறைச்சிக்கும் தொடர்பே இல்லையா? ஒரு உணவினால் மத உணர்வு புண்பட்டுவிடுமா என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவதற்கு முன்னால் மனிதர்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஒருசெல் உயிரினத்திலிருந்து படிப்படியாக பரிணாமம் பெற்றவர்கள் தான் நாம். அந்த வகையில் விலங்கினங்களின் உணவுப் பழக்கமும் நம்முடைய உணவுப் பழக்கமும் பெரும்பாலும் ஒன்றுதான். நம்மைபோல விலங்குகள் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதுமட்டுமே வேறுபாடு! மிக அடிப்படையில் பார்த்தால் எல்லா மனிதரும் அனைத்துண்ணிகளே என்கிறது மானுடவியல் ஆய்வு. அறிவியல் சொல்வதும் அதைத்தான். Gastronomic Tradition எனப்படுகின்ற உணவுக்கும் மனிதருக்கும், உணவுக்கும் பண்பாட்டுக்கும் இடையே இருக்கின்ற தொடர்பையும், உணவை உருவாக்கிடும் கலையையும் ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்.
பொதுவாக நம்முடைய வாழிடங்களும், தொழில்களுமே நமது உணவுப் பழக்கத்தையும் தீர்மானித்திருக்கின்றன. கடல்சார் வாழிடத்தில் வசித்தவர்கள் கடல்வாழ் உயிரினங்களை அதிகளவில் உண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். மலைகளிலும் காடுகளிலும் வசித்தவர்கள் அங்கு கிடைப்பவற்றை அதிகளவில் உண்டிருக்கிறார்கள். ஆடு மாடுகளை மேய்த்தவர்கள் அந்த விலங்குகளை அதிகளவில் உண்டிருக்கிறார்கள். மனிதப்பரவலும், இடப்பெயர்ச்சியும் நிகழ்ந்தபோது இந்த உண்வுப் பழக்கங்கள் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளன. மனிதரின் உணவில் புரதங்களும் கொழுப்பும் மிகவும் அவசியம் என்பதால் உலகிலுள்ள எல்லா மனிதர்களுமே இறைச்சியையோ, பால் பொருட்களையோ சார்ந்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
நாம் சாப்பிடாத விலங்கினங்கள் என்று அனேகமாக புவியில் எதுவுமில்லை. சில சட்டங்களின் அடிப்படையில் காலப் போக்கிலே சில உயிரினங்களை வெளிப்படையான உணவுப் பட்டியலில் இருந்து வேண்டுமானால் நாம் விலக்கி வைத்திருக்கலாம். வருணச்சட்டங்களும், மதச்சட்டங்களும், வனவிலங்குச் சட்டங்களும் உருவாகாத காலத்தில் நாம் எல்லா விலங்குகளையும் சாப்பிட்டிருக்கிறோம். மிகக்குறிப்பாக மாட்டுக்கறியையும் பன்றியையும் நாம் சாப்பிடாமல் தவிர்த்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
இந்தியரும் மாட்டிறைச்சியும்
இன்று திரித்து சொல்லப்படுவதைப் போல பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணப்படாத நிலை என்று எதுவுமில்லை. அம்பேத்கர் எழுதிய தீண்டப்படாதவர்கள் நூலையும், டி.என்.ஜா எழுதிய பசுவின் புனிதம் நூலையும் இது தொடர்பாக ஒருவர் படிப்பாரானால் பல வரலாற்று ஆதாரங்களை அறிந்துக் கொள்ள முடியும். வேதகாலத்தில் மாட்டிறைச்சி உண்ணுகின்ற பழக்கம் என்று ஒரு கட்டுரையை சோஷியல் சயிண்டிஸ்ட் இதழில் (வால்யூம். 7, எண்: 11, 1979) மஹாதேவ் சக்கரவர்த்தி எழுதியிருக்கிறார்.
மனிதன் எந்த விலங்கை பலியாகக் கொடுக்கிறானோ அந்த விலங்கை உண்ணவும் செய்கிறான் என்பது நடைமுறையில் இருக்கின்ற உண்மை. அதன் அடிப்படையில் வேதகாலத்தில் பலியிடல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலை எடுத்தால் அதில் பசுவும் இருக்கிறது. ரிக்வேத பாடல்களில் இந்திரன் காளைகளைப் புசிப்பவன் என்றும், அக்னி காளைகளையும், பசுக்களையும் புசிப்பவன் என்றும் (உக்சனா, வாசனா) இருக்கின்றன.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
பலியிடல்களுக்கு மட்டுமின்றி வழக்கமான உணவுக்கும் மாட்டிறைச்சியை உட்கொண்ட வழக்கங்களைப் பற்றிய சித்தரிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோமேதா மற்றும் அசுவமேதா யாகங்களில் பசுக்கள் பலியிடப்பட்டுள்ளன. குறிப்பாக ருத்ரனுக்கு செய்யப்படும் சுலகவா யாகத்தில் காளையைத்தான் பலியிடுவார்கள் (நூல்: கிரஹ்யசூத்ரா). தைத்திரிய பிரமாணம், அய்திரேய பிரமாணம், பஞ்சவிம்ச பிரமாணம், சதபத பிரமாணம் ஆகிய நூல்களில் சூரியனுக்கும், இந்திரனுக்கும், ருத்ரனுக்கும் காளைகளை பலியிட்டதும், யஞ்யவல்கியர், அகஸ்தியர் போன்ற முனிவர்கள் இதில் ஈடுபட்டதும் தெரியவருகிறது.
கல்பசூத்ரா, கிரஹ்யசூத்ரா ஆகியவை வாழ்க்கையின் பல்வேறூ தருணங்களில் உண்ணப்படும் உணவாக மாட்டிறைச்சியைச் சொல்கின்றன. ஷங்கியயான சூத்ரா, திருமணத்தின் போது செய்யப்படவேண்டிய மாட்டிறைச்சி உணவையும், மணமகளும், மணமகனும் வீட்டுக்கு வரும்போது செய்யவேண்டிய மாட்டிறைச்சி விருந்தையும் பற்றி குறிப்பிடுகின்றன. கோபில சூத்ரா, வீட்டுத் திறப்புவிழாவுக்கு கருப்பு பசு பலியிடப்படுவதைக் கூறுகிறது.
வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு ரிக்வேத காலத்தில் கோஹ்னா (பசுவைக் கொல்பவர்!) என்ற பெயரே இருந்திருக்கிறது என்பதை அய்திரேய பிரமாணமும், சதபத பிரமாணமும் சொல்கின்றன! மஹாதேவ் சக்கரவர்த்தியின் கட்டுரை இப்படியான பல செய்திகளை சொல்கின்றது. வால்மீகி ராமாயணத்திலும், மகாபாரதத்திலும், அர்த்தசாஸ்திரத்திலும், அசோகரின் கல்வெட்டுகளிலும், மனுஸ்மிருதியிலும் அன்றிருந்த ’நான்கு வருண’ மக்களும் மாட்டிறைச்சியை சாப்பிட்டார்கள் என்ற செய்2தி விரவிக்கிடக்கின்றது.
தமிழ் நாட்டில் ஆதிமனிதர்கள் பசுக்களை வேட்டையாடும் பாறை ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. இலக்கியங்களில் சொல்லப்படும் ஆநிரைக் கவர்தல் என்ற செயலுக்குப் பின்னால் மாட்டிறைச்சி உண்ணல் ஒளிந்திருப்பதாக சில ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றனர். அதோடு மட்டுமின்றி சில ஆற்றுப்படை நூல்களில் புளிச்சோறும் காளைக்கறியும் சமைக்கும் எயினப் பெண்களைப் பற்றிய குறிப்புகளும் வருகின்றன.
புனித பசு
இப்படி இந்தியாவில் அன்று எல்லோராலும் உண்ணப்பட்ட மாட்டிறைச்சி திடீரென்று விலக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டதும், மாடுகளுக்கு கோமாதா, காமதேனு என்ற அடைமொழிகளைச் சூட்டி புனிதத்தன்மையை உருவாக்கியதும் மிகவும் திட்டமிடப்பட்ட உள்நோக்கத்தால் நிகழ்ந்தது என்று அம்பேத்கர் தன்னுடைய தீண்டப்படாதவர்கள் நூலில் சொல்கிறார். அவருடைய கருத்தைப் போலவே மர்வின் ஹாரிஸ் போன்ற மானுடவியல் ஆய்வாளர்களும் தமது நூல்களில் எழுதியிருக்கிறார்கள்.
கி.பி.600ல் இந்தியாவில் ஏற்பட்ட போர்கள், பஞ்சம், வறட்சி ஆகியவை மக்களின் வாழ்க்கையை கீழேதள்ளின. அப்போது வேதகால யாகங்களை அவர்களால் தொடர முடியவில்லை. இந்தச் சமயத்தில் புத்தர், மகாவீரர் சொன்ன உயிர்களைக் கொல்லாமை என்கிற கருத்து மக்களுக்குப் பிடித்திருந்தது. உழவுக்கும், பால்பொருட்களுக்கும் பயன்பட்டுவந்த கால்நடைகளை மக்கள் கொல்ல விரும்பவில்லை. வேதங்கள் சொன்ன பசுக்கொலைகளை மக்கள் ஏற்கவில்லை. அசோகர் போன்ற அரசர்களும் பௌத்தக் கருத்துகளால் ஈர்க்கப்படனர். பௌத்தம் வேகமாகப் பரவியது.
உடனே வருண நிலையில் முதலாவதாக இருந்த பிராமணர்கள் தாங்கள் இழந்த தலைமை ஸ்தானத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக விலங்குகளைக் கொன்று யாகங்களைச் செய்வது, பசு உள்ளிட்ட இறைச்சிகளை உண்ணுவது என்கின்ற பழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, இறைச்சியிலிருந்து பாலுக்கு மாறி தங்களை சைவ உணவு உண்பவர்களாக கட்டமைத்துக் கொண்டனர். அவர்களைப் பார்த்து இடை வருண மக்களும் மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட்டனர். அந்தப் பழக்கத்தை தொடர்ந்த அல்லது தொடரும்படிக்கு நிர்பந்திக்கப்பட்ட (இறந்த மாட்டை தலித்துகளே அப்புறப்படுத்த வேண்டும் என்ற சாதிய வழக்கம் இன்றும் கிராமங்களில் நிலவுகிறது) தலித் மக்கள் அதே காரணத்தைக் கொண்டு தீண்டாமை வளையத்துக்குள் தள்ளப்பட்டனர் என்கிறார் அம்பேத்கர்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
பசுவை மட்டும் ஏன் கொண்டாடவேண்டும் என்று ஒரு கேள்வியைக் கேட்டால், பசுக்கள் அன்னையரைப் போல பால் தந்து நம்மை வளர்க்கின்றன, கடுமையாக உழைக்கின்றன, விவசாயத்துக்கு உதவுகின்றன என்றெல்லாம் பதில் வரும். ஆனால் உண்மையில் இந்தியாவில் வேளாண்மைக்கு மாடுகள் மட்டுமே பயன்படுவதில்லை. ஒட்டகங்கள், எருமைகள், கழுதைகள், குதிரைகள் என பல விலங்குகள் உதவுகின்றன. பசுக்களை விடவும் எருமைகளே இந்தியாவில் பால் உற்பத்திக்கு அதிகளவு பங்களிக்கின்றன. ஆனால் எல்லா விலங்குகளையும் பசுவைப் போல தலையில் வைத்து கொண்டாடுவதில்லை. எருமைகளை நிறத்தின் அடிப்படையில் கீழாக எண்ணுகின்ற நிலையும் இருக்கிறது. இன்று விவசாயம் செய்வதற்கு பலவகையான இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனாலும் பசுவின் மீது சுமத்தப்பட்ட அந்தப் புனிதப்பட்டம் மட்டும் இன்னும் போகவேயில்லை.
பேராசிரியர் ஜா தன்னுடைய பசுவின் புனிதம் நூலில், ஆரிய கருத்து நிலையாலேயே பசு புனித விலங்கு அந்தஸ்தை அடைந்தது என்கிறார். வேதகாலம் தொட்டே பசுவின் பால், தயிர், நெய், சாணம் போன்றவை சடங்குகளிலும், புனிதப்படுத்துகிற நடைமுறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அப்பொருட்களுக்கும், அதைத் தருகின்ற பசுவுக்கும் ஒருவகையான புனித அந்தஸ்து ஏற்படுத்தப்பட்டிருந்தது. பால்கொடுக்கும் பசுக்களைக் கொல்லக்கூடாதென்ற கருத்துகள் வேத காலத்திலேயே இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலவின. மங்கலாக இருந்து வந்த இந்தப் புனித அந்தஸ்து வலுவான கருத்துருவாக்கங்களால் உறுதிபடுத்தப்பட்ட ஒன்றாக பின்னர் மாறிவிட்டது.
பௌத்தப் பரவலுக்குப் பின்னர், இந்திய மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போய்விடாதிருக்க, நாங்கள் பசுக்களை கொல்பவர்களில்லை. அவற்றை புனிதமாகப் போற்றுகின்றவர்கள் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஆரியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பின்னர் அதே ’புனிதப்பசு’ கருத்தை பௌத்தம் ஏற்ற தலித் மக்களின் மீது பிரயோகிக்கும் ஆயுதமாக இந்துத்துவவாதிகள் மாற்றியிருக்கிறார்கள். காலப்போக்கில் தலித்துகளை ஒடுக்குவதற்கு மட்டுமின்றி இஸ்லாம் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கும் ‘புனிதப் பசு’ கருத்து அவர்களுக்கு பயன்படத் தொடங்கியிருக்கிறது.
மாட்டுக்கறியும் அரசியலும்
இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பிருந்தே பசுவை முன்வைத்து மோதல்கள் இருந்து வந்தாலும், இந்துத்துவ கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிகள் ஒன்றியத்திலும், மாநிலத்திலும் உருவாகத் தொடங்கியப் பின்னர் மாட்டுக்கறி அரசியலாகவும், பசுப் பாதுகாப்புக் கொலைகளாகவும் உருமாறியுள்ளன. இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பசுபாதுகாவலர்கள் (கோ-ரக்ஷன்ஸ்) இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும், பழங்குடியினரையும் பசுவைக் கொல்வதாகச் சொல்லி அடித்துக் கொல்கிற செய்திகள் நாள் தோறும் குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்து வருகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களின் வழிகாட்டு நெறிமுறைகளில், (ஆர்டிகிள் - 48) பால்தரும் பசுக்களையும் கன்றுகளையும் கொல்லக்கூடாது என்கிறது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மேம்படுத்திடும் நோக்கிலேயே இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைத் திருத்தி நாடு முழுமைக்குமாக பசு வதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து தங்களின் மாட்டுக்கறி அரசியலை நிறைவேற்றிக் கொள்வதற்கு வலதுசாரி அரசியலமைப்புகள் துடித்துவருகின்றன.
இந்த மதவாத அரசியலுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாதென்ற எண்ணத்தோடு தமிழகத் தலைவர்கள் தொடக்கக் காலம் முதலே போராடி வந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால் விதிக்கப்படும் தடையை எதிர்த்து பன்றிக்கறி விருந்து மற்றும் மாட்டுக்கறி விருந்து போராட்டத்தை நடத்திய பெரியார்,”தொட்டதற்கெல்லாம் இப்படியிருக்கின்ற அமைப்பு முறைகள் நாளாவட்டத்தில் மதிப்பிழந்து மறைந்துக் கொண்டே வருகின்றன. நாம் உலகம் ஒன்றாகவேண்டும் என்று நினைக்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1
சென்னை பெரியார் திடலில் 04.05.1979 அன்று நடைபெற்ற பசுவதைத் தடுப்புச் சட்ட எதிர்ப்புக் கூட்டத்தில்,”மதத்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் இந்தச் சட்டம் நாட்டை மிகப் பயங்கரமாகப் பாதிக்கும். இந்தச் சட்டம் தேவையற்றது. திரும்பப் பெறவேண்டியது. நடைமுறைக்கு வரக்கூடாதது” என்று கலைஞர் கருணாநிதி பேசியிருக்கிறார். இந்தத் தலைவர்களின் கருத்தியல் வழிகாட்டலில் தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில் தான்,”ஆம்பூரில் நிறைய இந்துக்கள் வாழ்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்தத் திருவிழாவில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன” என்ற அதிகாரத்தின் குரல் கேட்கிறது. மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு இத்தகைய குரல்களை தொடக்கத்திலேயே தடுத்திட வேண்டியது அவசியம்.
மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இன்று நிறைய பேரிடம் இருக்கிறது. பன்றிக்கறி உண்ணும் பழக்கம் இன்று நிறைய பேரிடம் இருக்கிறது. இதிலெல்லாம் மதமோ, சாதியோ கள யதார்த்தத்தில் இல்லை. மக்களிடையே எல்லா உணவு வகைகளையும் சுவைத்துப் பார்க்கின்ற மனநிலையும், வசதிகளும் இன்று அதிகரித்திருக்கின்றன. அவற்றை பின்னுக்கு இழுக்கவேண்டாம். நாம் சாதியற்ற, பழமை வாதங்களற்ற நவீனச் சமூகமாவதற்கு பலவற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. மதங்களில் இருக்கும் சாதியை. திருமணங்களில் இருக்கும் சாதியை. வாழிடங்களில் இருக்கும் சாதியை. உணவில் கலக்கப்படும் சாதியை. கடைசியாக மனங்களில் இருக்கும் சாதியை.
இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 4
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.