Advertisment

தேசிய குடிமக்கள் பதிவைச் செய்ய கட்டமைப்பு இருக்கிறதா?

பிறப்பைப் பதிவது ஒவ்வொரு குழந்தைக்குமான உரிமை மட்டுமல்லாமல் சட்டரீதியாக அக்குழந்தையின் அடையாளத்தை நிறுவுவதன் முதல் படியும் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CAA protest, caa act

Delhi Election Result 2020 : clean sweep for AAP

முடித் கபூர், ஷமிகா ரவி

Advertisment

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசாங்கம் இதையடுத்து நாடளாவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் கொண்டுவரும் என்றார். அதுவே நாடு முழுவதுமான கருத்தியல் பிரிவினைக்கும் சூடான விவாதத்துக்கும் காரணமாக அமைந்தது.

1955 குடியுரிமைச் சட்டத்தில் 14 அ பிரிவு அனுமதிக்கும் மூன்று பொருள்கள் முக்கியமானவை. ஒன்று, ஒவ்வொரு குடிமகனு/ளுக்கும் கட்டாயப் பதிவையும் தேசிய அடையாள அட்டையையும் வழங்கலாம். இரண்டாவது, தேசியக் குடிமக்கள் பதிவேட்டைப் பராமரிக்கவும் அதற்காக ஒரு தேசிய பதிவு அதிகார அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தவும் செய்யலாம். மூன்றாவதாக, 2003 குடியுரிமை திருத்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து, 1969 பிறப்பு/ இறப்பு பதிவுச்சட்டத்தின் உள்பிரிவு 1-ன் படியான தலைமைப் பதிவாளரே, தேசிய பதிவு அதிகாரியாகவும் குடிமக்கள் பதிவின் தலைமைப்பதிவாளராகவும் செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது!

எப்படியோ, தேசிய குடிமக்கள் பதிவை மைய அரசு மேற்கொள்ளவேண்டுமா என்பது அறநெறிப்படி முதன்மையான கேள்வியாக இருக்க, அப்படியான இலக்கைநோக்கிய பணியைச் செய்யுமளவுக்கு மைய அரசு திறனுள்ளதா என்கிற சாதகமான கேள்வியும் அதைவிட முக்கியமானது. ஏனென்றால், தேசிய குடிமக்கள் பதிவைத் தவறாகச் செயல்படுத்தினால் அதன் விளைவாக உருவாகும் மனித உரிமை அவலம் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவுக்கு மிக மோசமாக இருக்கும்.

தேசிய குடிமக்கள் பதிவை மேற்கொள்வதற்கான மைய அரசின் திறன் குறித்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தலைமைப்பதிவாளரின் முதன்மையான செயல்பாடுகளை கவனிப்போம். 1969 பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டத்தைச் செயல்படுத்துவது என்பது இந்தியா முழுவதிலும் எங்கெங்கு பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அதைப் பதியவேண்டியது கட்டாயம் ஆகும். பிறப்பைப் பதிவது ஒவ்வொரு குழந்தைக்குமான உரிமை மட்டுமல்லாமல் சட்டரீதியாக அக்குழந்தையின் அடையாளத்தை நிறுவுவதன் முதல் படியும் ஆகும்.

இச்சட்டத்தின்படி, குடிமைப் பதிவு முறையானது பிறப்பு, இறப்பு, வருங்காலப் பிறப்பு போன்ற முக்கியமான வாழ்க்கைச்சம்பவங்களை ஆவணப்படுத்துவதற்கான தொடர்ச்சியான, நிரந்தரமான, கட்டாய, உலகளாவிய சீராக்கப்பட்ட செயல்முறை ஆகும். 2017 குடிமைப் பதிவு முறையின் அடிப்படையிலான புள்ளிவிவரங்களை உன்னிப்பாக கவனித்தால், பல குறைபாடுகள் தென்படுகின்றன. தேசிய குடிமக்கள் பதிவைச் செயல்படுத்துவதில் அரசாங்கத்துக்கு வரக்கூடிய முதல்நிலை சவாலாகவும் இது உள்ளது.

முதலில், பிறப்பு/இறப்புப் பதிவில் மாநிலங்களுக்கு இடையிலேயே பெரிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அளவில் பெரியதாகவும் வளர்ச்சியில் சிறிதாகவும் உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் முறையே 62%, 74% பிறப்புகளும் 38%, 43% இறப்புகளுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 85% பிறப்புகளும் 74% இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் 40%-க்கும் குறைவாகவே இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டமும் இலங்கை தமிழர்களும்! தமிழகம் சி.ஏ.ஏவை எதிர்க்க காரணம் என்ன?

நூறு சதவீதம் பிறப்புகள் பதிவாகியுள்ள அசாமில்கூட, 66% இறப்புகள்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவே, அரசியல்சாசனப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ள பிறப்பு, இறப்புப் பதிவுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு கட்டமைப்புக் குறைபாட்டை தெளிவாகக் காட்டுகிறது. இப்போதைய நிலைமையில் தேசிய குடிமக்கள் பதிவை மேற்கொண்டால், சமூகத்தில் எளிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு பாதகமாக இருக்கும் என்பதையும் உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.

அடுத்து, இதை எப்படிச் செயல்படுத்துவார்கள் என்பதைப் பற்றி புரிந்துகொள்ள, ஓர் ஆண்டுக்கும் குறைவான குழந்தைகள் போன்ற குறிப்பிட்ட வகையினரின் இறப்புப் பதிவை கவனிப்போம். அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லாததால் அவர்கள் பெரியவர்களையே சார்ந்திருக்கவேண்டும் எனும் நிலை.. இதனால் சமூகத்தாலும் அரசாலும் ஒதுக்கப்படுகின்றனர். இந்த அக்கறையின்மை, அவர்களின் பதிவு எண்ணிக்கையிலும் வெளிப்படுகிறது. குடிமைப் பதிவு முறையுடன் மாதிரிப் பதிவு முறையை ஒப்பிட்டு அதன் மூலம் புள்ளிவிவரத்தை மதிப்பிடுகையில், 19% பச்சிளம் குழந்தைகளின் இறப்பே பதிவுசெய்யப்படுகிறது.

பீகார் போன்ற பெரிய மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பச்சிளம்குழந்தைகளின் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வெறும் 4.3% அளவுக்குதான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சமூக முன்னேற்றம் அதிகமெனக் கூறப்படும் கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முறையே 62%, 58% பச்சிளம்குழந்தைகளின் இறப்பே பதிவுசெய்யப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் நிலைமையைக் காணவேண்டிய அரசின் மோசமான தன்மையையே இது காட்டுகிறது.

குழந்தை இறப்புவீதத்துக்கும் குழந்தை இறப்புப்பதிவுக்கும் இடையிலான தொடர்பு நேரெதிராக உள்ளதை நாம் பார்க்கலாம். குறிப்பாக, குழந்தையிறப்பு மோசமாக இருக்கும் மாநிலங்களில் பதிவுக் கட்டமைப்பு முறை மோசமாக இருக்கிறது. ஐ.நா. சபை வலியுறுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா அடையவேண்டும் என்றால், அனைத்து குழந்தையிறப்புகளையும் துல்லியமாக அரசாங்கம் கணக்கிடுவது கட்டாயம் ஆகும்.

கடுமையான திறன் மட்டுப்பாடு உள்ள நிலையில், தேசியக் குடிமக்கள் பதிவை எப்போது தொடங்கினாலும் அதற்கு முதல்படியாக குறைந்தது நாட்டில் ஏற்படும் பிறப்பையும் இறப்பையும் பதியும்படியாக அரசுக் கட்டமைப்பை உள்துறை அமைச்சகம் வலுப்படுத்தியாகவேண்டும். இதன் திட்டமிடப்படாத விளைவு என்பது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் உடனடித் தாக்கத்தை உண்டாக்குவதாக- குறிப்பாக இறப்புகளில் வழக்கமான நம்பகமான புள்ளிவிவரம் கிடைக்காவிட்டால் உரிய கொள்கைமுடிவுகள் எடுக்கப்படாமல் தடுக்கப்படுவதாகவும் அமையக்கூடும். இப்போதைய நிலையில், தேசிய குடிமக்கள் பதிவை மேற்கொள்வதற்கு உள்ள கட்டமைப்பு போதுமானது அல்ல. இது, சமூகத்தில் ஏழை எளியவர்களை வலுவற்றவர்களை ஒதுக்கித்தள்ளும்; குழப்பத்துக்கும் குளறுபடிகளுக்கும் வழிவகுப்பதாகவே அமையும்.

இக்கட்டுரை, முன்னதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், தேசிய குடிமக்கள் பதிவும் அரசின் இயலாமையும் எனும் தலைப்பில் வெளியானது. முடித், ஐஎஸ்ஐ நிறுவனத்திலும் சமியா இரவி, புரூக்கிங் இந்தியா’விலும் பணிபுரிகின்றனர்.

இதனை தமிழில் படிக்க - Existing govt infrastructure is not conducive to launch NRC.

தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்

Narendra Modi Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment