Citizenship Amendment Act : குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது சேர்ப்பதாக இருக்கிறது. நீக்குவதாக இல்லை. இந்திய முஸ்லீம்களை ஏதும் செய்யாது. எந்த ஒருவரின் குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்காது. மத ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை மட்டுமே வழங்கும். நாட்டின் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்களின் வாழ்வை எளிதாக்கும். அரசின் நலத்திட்டங்களைப் பெற வழிவகுப்பதுடன், கவுரமாக அவர்கள் வாழவும் வழிவகுக்கும்.
அர்ஜூன்ராம் மேக்வால்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடியுரிமை திருத்த சட்டம், அரசிதழில் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது முதல் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு சுதந்திரபோராட்ட தியாகிகள், தொலைநோக்கு எண்ணம் கொண்ட தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் அடையாளமாக இந்த தருணம் திகழ்கிறது. மதரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் நீண்டகால கோரிக்கைக்கு நிவாரணமாக குடியுரிமை திருத்த சட்டம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு வரலாற்றில் இருந்து இரண்டு நிகழ்வுகளை நினைவு கூறுவது உபயோகமாக இருக்கும்.
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து, சோதா ராஜ்புத், மேக்வால், பீல், சாரான், மகேஸ்வரி மற்றும் சிந்தி சமூகத்தை சேர்ந்த மக்களைக் கொண்ட சுமார் ஒரு லட்சம் அகதிகள் வருவதை ராஜஸ்தான் எதிர்கொண்டது. போருக்குப் பின்னர், போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்ளுதல், படைகளை விலக்கிக் கொள்ளுதல் ஆகிய அம்சங்களைக் கொண்ட சிம்லா ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஜூல்ஃபிகர் அலி பூட்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஐந்து நாள் மாநாட்டின் போது அடல்பிகாரி வாஜ்பாய் சிம்லாவுக்கு வந்தார். ராணுவ வீர ர்களின் தியாகங்கள் பேச்சுவார்த்தை மேஜையில் சரண் அடைவதாக இருக்கக் கூடாது என்றும், வலுவான நிலையை மேற்கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்தார்.
சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது!
வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜன சங்கம், சிம்லா ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தானுக்கு அகதிகள் திரும்பிச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்தத்தை எதிர்த்து பாகிஸ்தானில் உள்ள இந்தியா ஆக்கிரமித்த காத்ரா நகரை நோக்கி 1972-ம் ஆண்டு ஜூலையில் வாஜ்பாய் பேரணியாகச் சென்றார். போராட்ட களத்தின் மையமான பார்மரில் காத்ரா சாலையில் வாஜ்பாய் தங்கி இருந்தபோது, அவருக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். வாஜ்பாயியும் அவருடன் தன்னார்வலர்களும் இந்தியாவின் காத்ரா ரோடு பகுதியில் இருந்து இந்தியா ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தானின் பகுதிக்குள் 6 கி.மீ வரை சென்று “பாதிக்கப்பட்ட மதசிறுபான்மையினர், தலித்கள் இந்தியாவின் கவுரவமான வாழ்க்கை வாழ வழி செய்கின்றேன்” என்று உறுதி கொடுத்தார்.
அவர், கோஜ்ராஐ் மகேஸ்வரி வீட்டில் தங்கி அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களை சந்தித்தார். இந்தியாவுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். ராஜஸ்தானில் உள்ள சோட்டன் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான தருண் ராய் காகா, என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், பாகிஸ்தானின் தார்பார்கார் மாவட்டத்தில் உள்ள சாக்ரோ டவுண்ஷிப்பில் இருந்து காத்ரா ரோடு முகாமுக்கு 1972-ல் வந்தார். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி முதலாவது அரசில், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி இந்து, சீக்கிய அகதிகள் குடியுரிமை கோரி விண்ணபித்தால் அதில் முடிவு எடுப்பது குறித்து ஆட்சியர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது.
கராச்சியில் உள்ள மோகதா மாளிகை(இப்போது ஜின்னா வீடு)யின் முந்தையகால வரலாற்று நிகழ்வுகள், மத சிறுபான்மையினர் மீது பாகிஸ்தான் தலைமை குரோதமனப்பான்மையுடன் நடந்து கொள்வதற்கான சாட்சியங்களாகும். பிகானரை பூர்வீகமாக க் கொண்ட மார்வாரி தொழில் செய்யும் ஷிவ் ரத்தன் மோகதா , தம் மனைவிக்காக கராச்சியின் கிளிஃப்டன் பகுதியில் கடற்கரை அருகே அரண்மனை போன்ற ஒரு மாளிகை கட்டினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், கராச்சி வழியே லண்டனுக்கு பிரிவினை குறித்து ஆலோசனைக்காக தலைவர்கள் செல்வது வழக்கம். அப்படியான பயணங்களின் போது முகமது அலி ஜின்னா(பாகிஸ்தானை உருவாக்கியவர்) மோகதா மாளிகையில் தங்குவது வழக்கம். அது போன்று தங்கிய ஒரு தருணத்தில் ஜின்னா, ஷிவ் ரத்தன் மோகதாவிடம், பிரிவினைக்குப் பிறகு இந்த மாளிகையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் என்று கூறினார். ஆனால், அதன் பின்னர் மகோதா பல முறை கேட்டுக் கொண்டபிறகும், அந்த மாளிகையை விட்டு வெளியேற ஜின்னா மறுப்புத் தெரிவித்தார்.
ஷிவ் ரத்தன் மகோதா, ஜின்னா உடனான பரிமாற்றம் குறித்து, பிகானரின் ஆன்மீகவாதியும், எளிய அதே நேரத்தில் வசதிபடைத்தவருமான தமது சகோத ரர் ராம் கோபால் மகோதாவிடம் பேசினார். அப்போது அவர் ஷிவ் ரத்தனிடம், “அரசன் தமது பகுதியில் வாழும் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் அங்கு வசிக்கக் கூடாது,” என்று கூறினார். பாகிஸ்தானை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். சுதந்திரத்துக்குப் பின்னர், ஷவ் ரத்தன் மகோதா, மும்பையில் செட்டில் ஆனார்.
குடியுரிமை திருத்த சட்டமும் இலங்கை தமிழர்களும்! தமிழகம் சி.ஏ.ஏவை எதிர்க்க காரணம் என்ன?
1948-ம் ஆண்டு செப்டம்பரில் ஜின்னா மறைந்த பிறகு, அந்த அரண்மனை போன்ற பங்களா ஃபாத்திமா ஜின்னாவுக்கு வழங்கப்பட்டது. அசையா சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்ற அரசின் விதிகளின் கீழ் தமது மகோதா பங்களாவுக்குப் பதில், மும்பையில் உள்ள ஜின்னா இல்லத்தை பெறுவதற்கு ஷிவ் ரத்தன் மகோதா விரும்பினார். அப்போதைய பம்பாய் மாநில முதல்வர் பி.ஜி.கேர், இது குறித்து பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார். ஆனால்,அ வரது முயற்சிகள் பலிக்கவில்லை. ஜின்னா அப்போது, நேருவிடம் தமது மும்பை சொத்தை யாருக்கும் கொடுக்கவிரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டமானது, நாடு பிரிவினையால் பாதிக்கபட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு நிம்மதிப்பெருமூச்சை கொண்டு வந்திருக்கிறது. பிரிவினையின் போது பாதிக்கப்பட்ட லட்சகணக்கான தனிமனிதர்கள் முதல் தருண் ராய் காகா உள்ளிட்டோர் மற்றும் பிகானரின் தொழில் அதிபர் மகோதா போன்ற குடும்பத்தினர் வரை இந்த திருத்தச் சட்டத்தால் நிம்மதியடைந்துள்ளனர்.
அவ்வப்போது காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்ட மத சிறுபான்மையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றன. 1950-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி, பாராளுமன்றத்தில் நடந்த குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் நேரு, சியாமா பிரசாத் முகர்ஜியின் இந்த கருத்தை குறிப்பிட்டு பேசினார்; “அவருடைய (முகர்ஜி) கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன். இடம் பெயர்ந்தோரின் நிலைமை என்பது, விரும்பத்தக்கதில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது,” என்றவர் மேலும் கூறுகையில், “இந்தியாவுக்கு வந்த மக்கள், இடம் பெயர்ந்து வந்தவர்கள், இந்தியாவில் குடியிருப்பவர்கள் குடியுரிமை பெற தகுதி பெற்றவர்கள். இதற்கு போதுமான சட்டம் இல்லை எனில், சட்டம் மாற்றப்பட வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை.” என்றார்.
2003-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மீது மாநிலங்களவையில் விவாதம் நடந்தபோது, அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மன்மோகன் சிங் பேசும்போது, “பாதிக்கப்பட்ட மதசிறுபான்மை அகதிகள் விஷயத்தில் தாராள அணுகுமுறை தேவை,” என்று வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெய்லாட், தமது முந்தைய ஆட்சியின் போது, அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு. பாகிஸ்தான் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை குறித்து கடிதம்எழுதினார். அசாம் முதல்வர் தருண் கோகைய், 2012-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த கோரிக்கை மனுவில், பிரிவினையின்போது மதபாகுபாட்டால் பாதிக்கப்பட்டு ஓடி வந்த இந்தியர்களை வெளிநாட்டவர்களாக கருதக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூட, 2012-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், வங்க அகதிகளுக்கான குடியுரிமை பிரச்னைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தும் பிரச்னைகுறித்து மோடி அரசு அக்கறை காட்டும்போது, எதிர்கட்சிகளைச் சேர்ந்தோர் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது சேர்ப்பதாக இருக்கிறது. நீக்குவதாக இல்லை. இந்திய முஸ்லீம்களை ஏதும் செய்யாது. எந்த ஒருவரின் குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்காது. மதரீதியாக பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை மட்டுமே வழங்கும். நாட்டின் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்களின் வாழ்வை எளிதாக்கும். அரசின் நலத்திட்டங்களைப் பெற வழிவகுப்பதுடன், கவுரமாக அவர்கள் வாழவும் வழிவகுக்கும்.
இந்த கட்டுரை முதலில், 2019 டிசம்பர் 26-ம் தேதியிட்ட நாளிதழில் “Refugee to citizen”. என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் பிகானர் மக்களவைத் தொகுதியின் எம்.பி., மற்றும் மத்திய கனரக தொழில்கள், பொது நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க - CAA will not take away anyone’s citizenship
தமிழில் மொழிபெயர்த்தவர் - பாலசுப்பிரமணி கார்மேகம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.