மெதுவான அல்லது நிதான நடைப்பயிற்சியில் ஈடுபடுவது உடல் எடை குறைப்பிற்கு உதவி செய்யாது எனப் பலர் கூறுவார்கள். ஆனால், அதில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய காரணிகள் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் வேகமாக செயல்படுவதில் சிரமம் உடையவர்களுக்கு இப்பயிற்சி உதவி புரியும்.
மெதுவான நடைப்பயிற்சியின் மூலம் அதிகளவிலான கலோரிகளை குறைக்க முடியாவிட்டாலும், உடல் எடை மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்தில் அது முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் தர்மேஷ் ஷா தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்தவர்கள், மூட்டு பிரச்சனை கொண்டவர்கள் போன்றோருக்கு மெதுவான நடைப்பயிற்சி பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதன் மூலம் காயம் ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும், மன அழுத்தத்தை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்களுக்கும் இது பலன் அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சீரான உணவு பழக்க வழக்கம், தொடர் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதுடன், நிதான நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை சீராக்கவும், ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளை சரியாக வைத்திருக்க உதவும் என மருத்துவர் ஷா கூறியுள்ளார்.
நிதான நடைப்பயிற்சி மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாக அமைகிறது. மனநல ஆரோக்கியம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைத்திருப்பதுடன், இயற்கையுடன் ஒன்றிணைய முடியுமெனவும் கூறப்படுகிறது. மனநலம் சீராக இருப்பதால், உடல் எடைக்குறைப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், மெதுவான நடைப்பயிற்சியை அனைத்து தரப்பு மக்களும் எளிமையாக நீண்ட காலத்திற்கு செய்ய முடியுமெனவும் கூறப்படுகிறது. நிதான நடைப்பயிற்சி நம் வாழ்வின் ஒரு அங்கமாகவும் மாறிவிடக் கூடியது.
நிதான நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக பணியாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வகையான நடைப்பயிற்சியினால் உடல் நலம் மற்றும் மனநலத்தை பேணிக் காக்க முடியுமென மருத்துவர் ஷா குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.