பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. ஆஸ்திரேலியாவோ, தங்களது மெயின் ஸ்ட்ரீம் ஸ்பின்னரான நாதன் லயன் கொண்டு விளையாடி, இந்தியாவை வீழ்த்தியது. எட்டு விக்கெட்டுகள் வீழ்த்திய நாதன் லயன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்தத் தோல்வியை அடுத்து, விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக, முன்னாள் இந்திய வீரர்கள், சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், வரும் 26ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் வெல்லும் அணிக்கே, தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், இரு அணிகளும் மெல்போர்ன் வெற்றிக்கு குறி வைத்துள்ளன.
மேலும் படிக்க - அந்த 'சொப்பனசுந்தரி கார்' இப்போது அமெரிக்காவில்.... அதுவும் தோனியின் பெயரில்!
இந்தச் சூழ்நிலையில், மெல்போர்ன் நகரில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சமீபத்தில் முன்னாள் வீரர்கள் அணியின் தேர்வு, விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்ததை விமர்சித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சித்துப் பேசுவதும் எளிது. அவர்களின் விமர்சனங்கள் மிகத் தொலைவில் இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம், அணிக்கு எது சிறந்ததோ அதை நேர்த்தியாகச் செய்கிறோம்.
பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா விவகாரத்தில் மட்டும் சேர்ப்பதா இல்லையா என்ற குழப்பம் இருந்தது. சிலர் பல்வேறு கருத்துகளை கூறினார்கள். இசாந்த் சர்மாவுக்கும், ஜடேஜாவுக்கும் களத்தில் நடந்த வாக்குவாதம் குறித்து நான் வியப்படையவில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமெனில், அந்த காட்சியை நான் ரசித்தேன். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் வீரர்களை நெருக்கமாக இருக்கச் செய்யும்.
விராட் கோலியின் நடவடிக்கை, செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. விராட் கோலி சிறந்த வீரர். அவரின் நடத்தையில் என்ன தவறு இருக்கிறது? விராட் கோலி உண்மையான ஜென்டில்மேன்.
மேலும் படிக்க: முடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம்? மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்?
அணியில் தொடக்க வீரர்கள் கூட்டணி மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. பொறுப்புணர்வுடன் விளையாடுவதும், நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதும் டார் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் கடமையாகும். முரளி விஜய், ராகுல் இருவரும் அனுபவமானவர்கள், சிறப்பாகச் செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
மாயங்க் அகர்வால் இளம் வீரர். இந்திய A அணிக்காக நிறைய ரன்களை அடித்திருக்கிறார். முற்றிலும் சாதனைகளின் அடிப்படையில் தேர்வாகியுள்ளார். உரிய வாய்ப்பு வரும்போது அழைக்கப்படுவார். அவரை எப்போதும் நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொருத்தவரை இன்னும் தொடரை இழக்கவில்லை, நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஹர்திக் பாண்ட்யாவா? ஹனுமா விஹாரியா? 3வது டெஸ்ட்டில் யாருக்கு வாய்ப்பு?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.