Ramiz Raja suggests jail time for match-fixing, compares it to COVID-19 umar akmal
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் உமர் அக்மல், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 3 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளில் இரண்டு பிரிவுகளின் கீழ் உமர் அக்மல் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவருக்க்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
Advertisment
உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்தன, ஒருமுறை சமீபமாக உடற்தகுதி மருத்துவர் உடல் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூற அவர் முன் ஆடைகளைக் களைந்து எங்கு உடல் கொழுப்பு இருக்கிறது என்று காட்டுங்கள் என்று கிண்டல் செய்ததும் பெரிய சர்ச்சையானது, ஆனால் அதிலிருந்து தப்பினார்.
உமர் அக்மல் தடை செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறுகையில், “ஆகவே... உமர் அக்மல் அதிகாரப்பூர்வமாக முட்டாள்கள் பட்டியலில் இணைந்து விட்டார். 3 ஆண்டுகள் தடை. திறமை எப்படி வீணடிக்கப்படுகிறது.
கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க பாகிஸ்தான் சட்டமியற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. தவறு செய்வோர் கம்பி எண்ண வேண்டியதுதான். இல்லையெனில் இன்னும் இது போன்ற சூதாட்டங்கள் நடந்து நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியதுதான்.
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் போல, கிரிக்கெட் உலகை இந்த சூதாட்டம் அச்சுறுத்து வருகிறது. இதிலிருந்து அந்த உலகத்தை காப்பாற்ற ரசிகர்கள், கிரிக்கெட் நிர்வாகங்கள், பங்குதாரர்கள், சட்ட துறை வல்லுனர்கள், நான், நீங்கள் என அனைவரும் போராட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஆமிர், ஷர்ஜீல் கான் ஆகியோரை மீண்டு சேர்த்ததற்காக ரமீஸ் ராஜா சாடிய போது, இந்த வீரர்கள் அணிக்குள் வரக்கூடாது, ஏதாவது மளிகைக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”