உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர் , நாளை (மே.30) இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஐசிசி புள்ளிப்பட்டியலில் டாப் 10 இடங்களில் உள்ள அணிகள் இத்தொடரில் களம் காண்கின்றன.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கிய அம்சங்கள் என்னவென்பதை இங்கே பார்ப்போம்,
அச்சுறுத்தும் ஃபாஸ்ட் பவுலர்ஸ்
இங்கிலாந்து கண்டிஷனில், வேகப்பந்துவீச்சை பார்ப்பதற்கு என்று தனியாக இரு கண்களை ஆர்டர் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, பல போட்டிகள் மேக மூட்டங்களுக்கு இடையே நடைபெறும் என்பதால், ஃபேஸ் பவுலர்களின் சொர்க்கபுரியாக அந்த மேட்ச் மாறும். அப்போது ஸ்விங் கடுமையாக இருக்கும். எப்பேற்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் அங்கு ஃபேஸ் பவுலர்களிடம் சரண்டர் ஆக வேண்டியது தான்.
மேலும் படிக்க - உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள 5 அணிகள்! ஒரு பார்வை
இந்தியாவைப் பொறுத்தவரை பும்ரா, ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப், தென்னாப்பிரிக்காவில் காகிசோ ரபாடா, லுங்கி ங்கிடி, இங்கிலாந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நியூசிலாந்தில் டிரெண்ட் போல்ட் ஆகிய பவுலர்கள் மீது ஒட்டுமொத்த பார்வையும் குவிந்துள்ளது.
மற்ற அணிகளிலும் திறன் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில், ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், விராட் கோலி போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன்களுக்கும், டாப் பவுலர்ஸ்களுக்கும் இடையேயான போரை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படுகின்றனர். நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதால், இத்தொடரில் யார் பெரியளவில் அசத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரியளவில் நிலவுகிறது.
சொந்த ரசிகர்கள் முன்பு களமிறங்கும் ஜோ ரூட்-க்கு அதுவே மிகப்பெரிய பூஸ்ட். விராட் கோலியைப் பொறுத்தவரை, கோடையில் செய்த சுற்றுப் பயணம் பேட்ஸ்மேனாக அவருக்கு தித்திப்பாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 593 ரன்கள் விளாசிய கோலிக்கு, இங்கிலாந்து பிட்சுகள் மீண்டும் இம்முறை தலைவணங்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஸ்டீவன் ஸ்மித் கம் பேக் கொடுத்திருக்கிறார். அதுவும் பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசி தனது வருகையை பிரம்மாண்டமான அச்சுறுத்தலுடன் எதிரணிகளுக்கு வெளிக்காட்டி இருக்கிறார்.
கேன் வில்லியம்சன் பிளேயராகவும், கேப்டனாகவும் களமாட வேண்டிய சூழல் இருப்பதால் நிச்சயம் அவருக்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது. இருப்பினும், அதை அவர் எளிதில் ஓவர்கம் செய்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.
வார்னிங் வங்கதேசம்
எந்த சர்வதேச அணியாலும் கணிக்க முடியாத அணியாக வலம் வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் கடினமான களங்களில் காலிறுதி வரை முன்னேறிய வங்கதேசம், இம்முறை குறிவைத்திருப்பது அரையிறுதி எனும் மெகா மார்க்கெட்டை.
அனுபவம் + துடிப்பு + இளமை + ஆக்ரோஷம் என்று வெரைட்டியான மாஸ் மசாலாவுடன் களமிறங்கி இருக்கிறது வங்கதேசம்.
மேலும் படிக்க - அசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி! உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்!
வங்கதேச அணியின் செயல்பாடு இந்த உலகக் கோப்பையில் எப்படி இருக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவலாக இருப்பதை மறுக்க இயலாது. அதேபோல், அதிரடி சூரர்களை கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதும் கோடிக்கணக்கான பார்வைகள் இருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.