18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நாள் விசாரணை சென்னை ஐகோர்ட்டில், நீதிபதி சத்தியநாராயணா முன்பு நடந்து வருகிறது.
அதிமுகவில் உள்ள சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதையடுத்து அவர்கள் 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
முதல் நாள் விசாரணை நேற்று (23.7.18) அன்று தொடங்கியது.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. நேற்று வாதாடிய வக்கில் பிஎஸ்.ராமன் இன்றும் தனது விசாரணையை தொடர்ந்து வருகிறார். அதன் நேரலையை காண ஐஇதமிழுடன் இணைந்திருங்கள்.
மாலை 4.30 மணி : நாளையும், வெள்ளிக்கிழமையும் சபாநாயகர் தரப்பு வக்கில் அரியமா சுந்தரம் விவாதம் செய்ய உள்ளார். வியாழனன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறாது என நீதிபதி சத்தியநாராயணா தெரிவித்தார்.
மாலை 4 மணி : 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வாதத்தை நிறைவு செய்தனர்.
பகல் 3.00 மணி : உணவு இடைவேளைக்குப் பின்னர் விவாதம் தொடங்கியுள்ளது.
பகல் 1.15 மணி : உண்வு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
பகல் 1 மணி : அதற்கு சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம், இந்த விஷயத்தை சபாநாயகர் முன்பும் தெரிவிக்கவில்லை, த்ந்லைமை நீதிபதி அமர்விலும் தெரிவிக்கவில்லை. சபாநாயகர் முன் விவாதிக்கப்படாத விஷயத்தை தற்போது எழுப்ப முடியாது என வாதிட்டார்.
பகல் 12.50 மணி : அது உண்மை தான் என வழக்கறிஞர் ராமனும் கூறினார். தொடர்ந்து நீதிபதி சத்தியநாராயணன், இந்த எதிர்ப்புகள் சபாநாயகர் முன் தெரிவிக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார்.
பகல் 12.40 மணி : அப்போது குறுக்கிட்ட முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,18 பேரும் அதிமுக எம்.எல்.ஏ. என்று கூறி தான் புகார் அளித்துள்ளனர் என்றார்.
பகல் 12.30 மணி : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தில் கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர், இந்த உத்தரவை பிறப்பித்திருக்க கூடாது. தேர்தல் ஆணைய முடிவு வரும் வரை காத்திருந்து இருக்க வேண்டும். மேலும், சபாநாயகரிடம் அளித்த புகாரில் அதிமுக கொறடா எனக்கூறியே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அதிமுக இல்லை என வாதிட்டார்.
பகல் 12.20 மணி : 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், ’’18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அதிமுக கொறடா புகார் அளித்த போது, கட்சி முடக்கப்பட்டிருந்தது. முதல்வர், சசிகலா அணியில் தான் இருந்தார். சசிகலா சிறை சென்றபின் மூன்று அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் இணைந்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
பகல் 12.10 மணி : ஆமாம் என பதிலளித்த வழக்கறிஞர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்திக்க உரிமை உள்ளதாகவும், கட்சியின் அப்போதைய துணைப்பொதுச் செயலாளர் தினகரனின் அனுமதியோடு தான் கவர்னரை சந்தித்து மனு அளித்ததாகவும் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
பகல் 12.00 மணி : அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முதல்வருக்கு எதிராக புகார் அளிப்பது அரசுக்கு எதிராக அல்ல என கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
காலை 11.40 மணி : தொடர்ந்து வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், எதிர்கட்சி கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுவதை தவிர, மற்ற அனைத்து சம்பவங்களும் இந்த வழக்குடன் பொருந்தும். அதேபோல எடியூரப்பா வுக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கும், முதல்வருக்கும் எதிராக் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலை 11.10 மணி :வாதத்தின் போது குறுக்கிட்ட சபாநாயகர் தரப்பு வக்கில் அரியமா சுந்தரம், ’’எடியூரப்பா வழக்கு இந்த வழக்குக்கு பொருந்தாது என தலைமை நீதிபதியும், நீதிபதி சுந்தரும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே இந்த நீதிமன்றத்தில் அதை கருத்தில் கொள்ளும்படி கோர முடியாது.’’ என்று பதிவு செய்தார்.
காலை 10.40 மணி : கவர்னர் முதல்வரை மாற்ற முடியாது. எம்.எல்.ஏ.க்கள் தான் முதல்வரை மாற்ற முடிவு செய்கின்றனர். எம்.எல்.ஏ. என்ற முறையில் கவர்னரை சந்தித்து மனு அளித்தோம். எடியூரப்பா வழக்கில் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் செய்ததையே நாங்களும் செய்தோம். அவர்கள் செய்தது சரி என்றால், நாங்காள் செய்ததும் சரி தான் என 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வக்கில் வாதிட்டார்.