லோகேஸ்வரி... கோவை கல்லூரி மாணவியான இவர் எத்தனை கனவுகளுடன் படிக்கப் போயிருப்பார். பேரிடர் மேலாண்மை பயிற்சி என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார் இவர்!
லோகேஸ்வரி என்கிற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம், தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கிறது. கோவையில் பேரிடர் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த போது படுகாயமடைந்து உயிரிழந்தார். குதிக்க மறுத்த மாணவியை பயிற்சியாளர் தள்ளிவிட்டதால் இந்த சோகம் நடந்திருக்கிறது.
லோகேஸ்வரி ... பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான கோவை கல்லூரி மாணவி
கோவை அருகே நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை, தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்தார். இதில் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரியின் 2வது மாடியில் இருந்து மாணவர்களும், மாணவிகளும் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
லோகேஸ்வரி தயக்கம் ... தள்ளிவிட்ட பயிற்சியாளர்!
லோகேஸ்வரி என்ற மாணவி இந்த பயிற்சியில் கீழே குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். 2வது மாடியின் சன் ஷேட் தளத்தில் அமர்ந்திருந்தாலும், பயத்தினால் அங்கிருந்து குதிக்க மறுத்தார். ஆனால் அவரை கீழே குதிக்கும்படி வற்புறுத்திய பயற்சியாளர் ஆறுமுகம், மாணவியின் மறுப்பை மீறி கீழே தள்ளிவிட்டார். இதனால் எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன் ஷேடில் மாணவியின் கழுத்து பகுதி பலமாக மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.
அங்கிருந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம், லோகேஸ்வரியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவியின் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி லோகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆலாந்துறை காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Coimbatore college girl death incident: கோவை மாணவி லோகேஸ்வரி இறுதி நிமிடங்கள் VIDEO. To Read, Click Here
கோவை மாணவி லோகேஸ்வரி துயர மரணம்: விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு
கோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை To Read, Click Here
லோகேஸ்வரியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது? யார் அனுமதி அளித்தது? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லோகேஸ்வரி கோவையில் எதிர்கொண்ட துயரம், இன்னொரு மாணவிக்கு நிகழக்கூடாது! இதில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்!