கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஒருவரின் தடுப்பு மருந்து செலவினங்களுக்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் ரூ.2.25 லட்சம் வரையில் பண உதவி செய்தார். காவல் ஆணையரின் இந்த செயல் சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வாரம், கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல் ஆய்வாளர், ராஜீவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மாநகர பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் மீண்டும் ராஜீவ் அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், கொரோனா சிகிச்சையில் அவசரகால நோக்கங்களுக்காக டாசிலிசுமாப் மருந்து நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மருந்து கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளியின் குடும்பத்தார் மருந்தை தங்கள் சொந்த முயற்சியில் வாங்கும் நிலை தான் உள்ளது.
சில நாட்களாக காவல் ஆய்வாளரின் உடல்நிலை மிகவும் பலவீனமானதால், அவருக்கு டாசிலிசுமாப் மருந்தை 3 முறை நிர்வகிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். தகவல் அறிந்த, சென்னை காவல் ஆணையர் மூன்று தடுப்பூசிக்கு தேவைப்படும் மொத்த பணத்தையும் (2.25 லட்சம்) தான் ஏற்றுக்கொளவதாக அறிவித்தார். ஒரு தடுப்பூசிக்கு ரூ.75,000 வரை செலவாகுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19க்கான மருத்துவமனை சார் சிகிச்சை மேலாண்மை நடைமுறைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் வரையறுக்கப்பட்ட அவசரகால நோக்கங்களுக்காக மட்டும் டாசிலிசுமாப் மருந்தை அதன் உண்மையான நோக்கத்தையும் தாண்டிப் பயன்படுத்த அனுமதித்தது.
முன்னதாக, கோயம்பேடு மார்க்கெட்டில் கண்காணிப்பு பணிகளை மேற்பார்வையிட்ட சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து பணி திரும்பினார். அப்போது, காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் துணை ஆணையரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றது மட்டுமல்லாமல், அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
சென்னையில் மட்டும், இதுவரை 550க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil