கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் அமித் ஷா: ஆதரவும், எதிர்ப்பும்!

'அமித் ஷாவுக்கு ஒரு அளவுகோல், எடப்பாடி பழனிசாமிக்கு இன்னொரு அளவுகோலா? பாஜக.வை நோக்கி திமுக நெருங்கிக் கொண்டிருப்பதை அதன் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன’

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகும் அவரை மையமாக வைத்தே அரசியல் காட்சிகள் நகர்கின்றன. சென்னையில் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற இருக்கும் கருணாநிதியின் இரங்கல் நிகழ்ச்சிக்கு அமித் ஷா அழைக்கப்பட்டிருப்பது அடுத்த சர்ச்சை ஆகியிருக்கிறது.

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு அந்த நிகழ்ச்சி நடக்கிறது. ‘தெற்கே உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியாக அதை ஏற்பாடு செய்கிறார்கள்.

அமித் ஷா வருகை: திமுக-பாஜக கூட்டணியா? சர்ச்சைக்கு ஆதாரமான 6 நிகழ்வுகள் To Read, Click Here

அமித் ஷா (பாஜக), குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்), தேவகவுடா (மதசார்பற்ற ஜனதா தளம்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), கெஜிரிவால் (டெல்லி முதல்வர்-ஆம் ஆத்மி), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா முதல்வர்), நாராயணசாமி (புதுச்சேரி முதல்வர்), சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), காதர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), டெரிக் ஓ பிரயன் (திரிணாமுல் காங்கிரஸ்) என முழுக்க இதர மாநில தலைவர்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

கருணாநிதியின் மரணத்தை தொடர்ந்து, திருச்சியில் ஊடகவியலாளர்கள் பங்கேற்ற இரங்கல் நிகழ்ச்சிக்கு திமுக ஏற்பாடு செய்தது. மதுரையில் இலக்கியவாதிகள், கோவையில் கலையுலக ஆளுமைகள், திருநெல்வேலியில் மாநில அரசியல் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கும் இரங்கல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து, சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இதில் கலந்து கொண்டாலும்கூட, அமித் ஷா-வுக்கு திமுக அழைப்பு விடுத்திருப்பதை அந்தக் கட்சிகள் ரசிக்கவில்லை. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் நாம் பேசியபோது, ‘கடந்த 2 ஆண்டுகளாக திமுக ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை அழைப்பதில்லை. பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியிலேயே காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக.வுடன் தொடர்ந்து மேடைகளை பகிர்ந்து வந்தன.

சென்னையில் கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சி: அமித்ஷாவுடன் பங்கேற்கும் தேசியத் தலைவர்கள் யார், யார்? To Read, Click Here

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் காங்கிரஸ் தலைவர்களைவிட பாஜக தலைவர்கள் அதிகம் வந்தனர். குறிப்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரபுகளை மீறி மருத்துவமனை வந்து நலம் விசாரித்தது, பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் அடுத்தடுத்த வருகை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் மரபை மீறி ஒத்தி வைத்து அஞ்சலி செலுத்தியது, ஒருநாள் தேசிய துக்கம் அறிவித்தது என மத்திய அரசு மற்றும் பாஜக தலைமையின் நடவடிக்கைகள் திமுக.வை உச்சி குளிர வைத்தன.

கருணாநிதியால் ஜனாதிபதி ஆக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, பிரதிபா பட்டீல், மன்மோகன்சிங் ஆகியோர் வராததை திமுக.வினர் கவலையுடன் பார்த்தனர். இந்த அம்சம்தான் பாஜக மீது திமுக.வுக்கு ஒரு கரிசனப் பார்வையை உருவாக்கியது. வாஜ்பாய் மரணம் அடைந்ததும் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தயாநிதி மாறன் என பலரும் டெல்லி சென்று பதில் மரியாதை செய்தனர். அதைக்கூட யாரும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கவில்லை.

அதன்பிறகு ஆகஸ்ட் 24-ம் தேதி வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தியதைத்தான் கூட்டணி கட்சியினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. திமுக.வை தவிர்த்து அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய கட்சிகள் அதிமுக.வும், பாமக.வும்தான்!

அதே நாளில்தான் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இன்னொரு ‘ஷாக்’காக, சென்னையில் கருணாநிதியின் இரங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கும் தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இந்தத் தகவலை முன் தினமே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு துக்க வீட்டுக்கு கட்சி பாகுபாடின்றி பலரும் சென்று அஞ்சலி செலுத்துவது சகஜம்! அதே சமயம் ஒரு கட்சி ஏற்பாடு செய்யும் இரங்கல் நிகழ்ச்சிக்கு யார், யாரை அழைப்பது என்பது மிக முக்கியம். இதே திமுக திருநெல்வேலியில் மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இரங்கல் நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அழைக்கவில்லைதானே? அவர்களும் முன்னதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்தானே?

அமித் ஷாவுக்கு ஒரு அளவுகோல், எடப்பாடி பழனிசாமிக்கு இன்னொரு அளவுகோலா? எனவே பாஜக.வை நோக்கி திமுக நெருங்கிக் கொண்டிருப்பதாகத்தான் அதன் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன’ என்கிறார்கள் அவர்கள்!

திராவிடர் கழக தலைவர் வீரமணி இது குறித்து இதுவரை கருத்து கூறவில்லை. திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன், ‘அமித் ஷாவை அழைத்ததை அரசியலாக பார்க்கத் தேவையில்லை’ என கருத்து கூறியிருக்கிறார். காங்கிரஸுக்குள் பலரும் இதை விமர்சித்து வந்தாலும், அந்தக் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், ‘அமித் ஷா வருவதைப் பற்றியோ, வராததைப் பற்றியோ எங்களுக்கு அக்கறை இல்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு வெளிப்படையாக திமுக நிலைப்பாட்டை விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் வன்னியரசு, ‘போகும் பாதை சரிதானா? கலைஞரின் புகழ்வணக்க நிகழ்ச்சி தான்… ஆனால் கலைஞரின் புகழை பரப்புவது பேசுவது என்பது- கொள்கையை பேசுவது என்பது, சனாதான கொள்கைகளுக்கு எதிராக பேசுவது தான்புகழ் வணக்கமாகும் சிறந்த வீரவணக்கமாகும்!

சனாதான கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக போராடும் பாசக கும்பலைச் சேர்ந்த அமித்ஷா மூலமாக கலைஞரின் புகழ் பேசுவது, பகுத்தறிவு பூக்கடைக்கு வருணாசிரம சாக்கடை தெளிப்பது போலாகும். செயல் தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாசக கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதைவிட, திமுவிலிருக்கும் பஜனை கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், கடந்த 2017 ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா நடைப்பெற்றது. அந்த விழாவுக்கு பாசக அழைக்கபடாதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு, “திராவிடக்கட்சிகளை அழிக்க நினைக்கும் பாசகவை ஏன் அழைக்கவேண்டும்?” என்று துணிச்சலாக கலைஞரின் வாரிசாக கேள்வி எழுப்பினார்.

அப்படிப்பட்ட ஸ்டாலின் அவர்கள் பாசக கும்பலை புகழ்வணக்க நிகழ்வுக்கு அழைத்தன் காரணம் என்ன? அரசியல் நாகரீகம் காக்கபட வேண்டும் என்பது தான் யாவர் விருப்பம். நேரில் அய்யா வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகும் அவரது அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவது என்ன விதமான பகுத்தறிவு? அஸ்தி தொடர்பான திமுகவின் நிலைபாடு என்ன?

இவையெல்லாம் என்னை போன்றோரை ஏமாற்றமடைய செய்கின்றன. திமுக ஆட்சி கட்டிலில் வர வேண்டும். தலைவராக மகுடம் சூட்டுவது மட்டுமல்லாமல் முதல்வராகவும் வர வேண்டும் என்பது தான் என்னைப் போன்றோருக்கு விருப்பம். ஆனால் ஸ்டாலின் அவர்களது செயல்பாடுகள் அதை நோக்கி போகவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
மதவாத- சனாதான கட்சியான பாசகவை அழித்தொழிப்பது தான் கலைஞருக்கு செய்யும் உண்மையான புகழ் வணக்கமாகும்.’ இவ்வாறு வன்னியரசு கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, ‘திமுக நிகழ்ச்சிக்கு அமித் ஷா வரவில்லை என அறிந்து மகிழ்கிறேன்’ என சுப்பிரமணியசுவாமி ட்விட்டரில் கூறியிருக்கிறார். இதனால் அமித் ஷா வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close